கடந்த 3 மாதங்களில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 2 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட காலாண்டு வருவாய் அறிக்கைபடி, 2022 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலத்தில் 2 லட்சம் சந்தாதாரர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் நெட்ஃபிளிக்சின் பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.
அதன்படி நடப்பு ஆண்டின் முதல் காலாண்டை 221.6 மில்லியன் சந்தாதாரர்களுடன் நிறைவு செய்துள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது. இது முந்தைய காலாண்டை காட்டிலும் சற்று குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த மூன்று மாதங்களில் சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் கிடைத்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சுமார் 25 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள காரணத்தால் ரஷ்ய நாட்டில் தங்கள் நிறுவன சேவைகளை நிறுத்திக் கொண்டுள்ளதும் ஒரு காரணம் என நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.
சமீப காலமாக டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களுடன் போட்டி அதிகரித்திருப்பதும் தங்களின் சந்தாதாரர்கள் திடீரென குறைந்ததற்கும் காரணம் என்றும் கூறியுள்ளது.
மேலும் கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஓடிடியில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் அமேசான், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் டிஸ்டி ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. அதேசமயம், ஒரே கணக்கை பலரும் பயன்படுத்தியும் வந்தனர். இதனால் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் கூறியுள்ளது.