world

img

சிரியாவில் 500க்கும் அதிகமான முறை இஸ்ரேல் தாக்குதல்

டமாஸ்கஸ், டிச. 12 - இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் 500 க்கும் அதிகமான முறை  தாக்குதல் நடத்தியுள்ளது.  சிரியாவை ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் (HTS) உள்ளிட்ட பயங்கரவாதிகளின் கூட்டுப்படை கைப்பற்றிய பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகள் வழியாக இஸ்ரேல் ராணுவம் சிரியாவை தாக்கத் துவங்கியுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன் அந்நாட்டின் கப்பற்படை தளங்களை தாக்கியது. இந்நிலையில் சிரியாவின் ராணுவத் தளங்களில் உள்ள ஆயுதங்களை தீவிரவாதிகள் கைப்பற்றிவிடக்கூடாது என இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக உண்மையற்ற தகவல்களை மேற்குலக ஊடகங்கள் பரப்பி வருகின்றன.  

இஸ்ரேல் ராணுவத்தின் முப்படைகளும் சிரியாவில் தாக்குதல் நடத்த துவங்கியுள்ளதாகவும் இந்த தாக்குதலில் சுமார் 80 சதவீதம் வரை சிரியாவின் ராணுவக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ஆயுதங்கள், பயிற்சிகள், தொழில்நுட்ப உதவிகள்  கொடுக்கப்பட்ட பயங்கரவாதிகள் சிரியாவின் ஜனாதிபதி அல் அசாத் ஆட்சியை கவிழ்த்தனர். தற்போது ஜனாதிபதி அசாத் தனது குடும்பத்துடன் ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்தார்.

இதன் மூலம் சிரியாவில் அசாத் குடும்பத்தினரின் 50 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. தற்போது சிரியாவிற்குள் புகுந்துள்ள இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டையும் ராணுவ ரீதியாக சுற்றி வளைத்துள்ளது.  இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி தற்போது லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா ராணுவத்திற்கு பதிலாக லெபனான் அரசுப்படைகள் முகாமிடத்துவங்கி யுள்ளன.

இவை அனைத்தும் இஸ்ரேல் பல ஆண்டுகளாக திட்டமிட்டு வருகிற  ‘அகண்ட  இஸ்ரேலின்’ ஒரு பகுதி என  மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.