இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் நூறாவது பிறந்தநாள் இன்று. 1925 டிசம்பர் 26இல் திருவைகுண்டத்தில் நான்கு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் கொண்ட பெரிய குடும்பத்தில் மூன்றாவதாகப் பிறந்தவர் நல்லகண்ணு. பெற்றோர்கள் ராமசாமி-கருப்பாயி. தமது15ஆம் அகவையிலேயே பள்ளிப் பருவத்தில் போராட்டக்களத்தில் குதித்தவர். நாங்குனேரிக்கு ஒரு மே நாளன்று வில்லிசைக் கலைஞர் பிச்சைக்குட்டி, பேராசிரியர் நா. வானமாமலை ஆகியோர் வந்திருந்தனர். அப்போது அங்கு சில தெருக்களில் பிற சமூகத்தினருக்கு அனுமதி கிடையாது. ஆனாலும் ஆயிரக்கணக்கான பேர் மீறிச் சென்றதால் ஜீயர் மடத்து ஆட்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கூட்டம் முடிந்து இரவு திரும்பிய நல்லகண்ணுவை ஒரு தூணோடு சேர்த்துக் கட்டி வைத்து அடித்தனர் மடத்து அடியாட்கள்.
நாங்குனேரி கிளைச் சிறையில் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் நெல்லைச் சதி வழக்கிலும் சேர்க்கப்பட்டதால் அவரது 29 ஆவது வயதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை சிறையில் ஏழாண்டுகள் தண்டனை அனுபவித்து 1956 இல் விடுதலையானார். மாநில அரசின் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டவர்களை விடுதலை செய்யலாம் என்றும், ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு உள்பட்டவர்களை விடுதலை செய்ய இயலாது என்றும் கூறினார் காமராஜர். இவரது முயற்சியின் காரணமாக சிறையிலிருந்த பலருக்கும் ‘பி‘ வகுப்பு சிறை கிட்டியது. (மதுரை சிறையில் நல்லகண்ணு இருந்தபோது அரசியல் கைதிகளுக்கான ‘பி‘ வகுப்பு சிறை கேட்டு 12 நாள்கள் உண்ணாவிரதமிருந்தது குறிப்பிடத்தக்கது)
சிறையிலிருந்து வெளிவந்த நல்லகண்ணுவுக்கு சாதி ஒழிப்புப் போராளி அன்னச்சாமியின் மகள் ரஞ்சிதம் என்பவருடன் 5.6.1958 அன்று நெல்லையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். நாடு விடுதலையடைந்த பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது தலைமறைவானார். 1949 டிசம்பரில் அவர் கைது செய்யப்பட்டபோது கூட்டாளிகளைப் பற்றியும் அவர்களது மறைவிடங்கள் பற்றியும் கேட்டு அவரது மீசையைப் பொசுக்கியும் முடிகளைப் பிய்த்தும் போலீசார் சித்ரவதை செய்தபோது தன் நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதிப்பாட்டுடனும் இருந்தார். மக்களின் வாழ்வாதாரத்திற்காக இவர் 1966 ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தில் உள்ள கடனா நதியில் அணை கட்டவேண்டும் என்று 11 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். பக்தவத்சலம் ஆட்சியின் பிடிவாதம் தளர்ந்து அக்கோரிக்கை ஏற்கப்பட்டு அணை கட்டப்பட்டது. 1967 ஆம் ஆண்டு நொச்சிக்குளத்தில் விவசாயிகள் அவர்கள் பயிரிட்டு வந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து இவரது தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து நல்லகண்ணு பன்னிரண்டு நாள்கள் தொடர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்தியதால் அப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்தது.
1969 இல் விவசாயிகள் பிரதிநிதியாக கிழக்கு ஜெர்மனிக்குச் சென்றார். 20 நாள்கள் சுற்றுப்பயணத்திற்குப் பின்னர் மாஸ்கோ, லெனின்கிராடில் ஐந்து நாள்கள் தங்கியிருந்து பின்னர் நாடு திரும்பினார்.1973 இல் சோவியத் யூனியன் சென்று மூன்று மாதங்கள் மார்க்சியப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு நாடு திரும்பினார். சிறையில் இருந்த காலத்தில் உண்டான வாசிப்புப் பழக்கத்தை தொடர்ந்த காலங்களில் விசாலப் படுத்திக்கொண்டார். வாழ்நாள் முழுதும் ஏராளமான புத்தகங்களை வாசித்துக் குறிப்புகளை எடுத்து வைக்கும் பழக்கம் சிறையிலிருந்து தொடங்கியவர், அவ்வப்போது கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி வந்தார். காசியில் பாரதியார் வாழ்ந்த வாழ்க்கைக் குறிப்புகளைத் திரட்டிக் கட்டுரை எழுதினார். ‘பி.சீனிவாசராவின் வாழ்க்கை வரலாறு (1975)’, விடுதலைப் போரில் விடிவெள்ளிகள் (1982), கங்கை காவிரி இணைப்பு(1986), பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள் (1986), நிலச்சீர்திருத்தம், மடம், கோயில் நிலங்கள்.., கிழக்கு ஜெர்மனியில் கண்டதும் கேட்டதும் எனும் பயண நூல் ஆகியவற்றை எழுதியுள்ளார்.‘இந்திய விவசாயிகள் பேரெழுச்சி’ எனும் நூலை மொழிபெயர்த்துள்ளார்.
தமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’ கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார். இவர் மீதான அன்பினாலும் அக்கறையினாலும் ஒரு பத்திரிகையாளர் அவருக்குக் கார் ஒன்றைப் பரிசாக அளித்தபோது அதனையும் கட்சிக்கே கொடுத்துவிட்டார்.சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்ட இவர் தொடர்ந்து எதிர்க்குரல் எழுப்பிக்கொண்டிருப்பவர், 1985 இல் குற்றாலம் அருவிக்கு அருகில் ‘ரேஸ் கோர்ஸ்’ அமைக்கும் முயற்சி நடந்ததை எதிர்த்து ‘தாமரை’ மாத இதழில் கட்டுரை எழுதியதைத் தொடர்ந்து பின்னர் அம்முயற்சி கைவிடப்பட்டது. 2010 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க அவரே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடித் தடை உத்தரவு பெற்றார். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் கொள்ளை நடப்பதற்கு எதிராகத் தீவிரமாகப் போராடினார். இன்றளவும் விவசாயிகள், தொழிலாளர் நலனுக்காகவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகவும், கார்ப்பரேட்களுக்கு எதிராகவும், சாதி-மத வெறிக்கு எதிராகவும் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார் ஆர்.நல்லகண்ணு.
தோழர் நல்லகண்ணு சுற்றுச்சூழல் போராளியாகவும் இருந்தவர். தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க அவரே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடித் தடை வாங்கினார். தூர்வாருதல் என்ற பெயரில் ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் அள்ளப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். தனக்கென பெரிதாக எந்தத் தேவையும் நோக்கமும் இல்லாத சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பை அளித்த தமிழருமான ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு தமிழக அரசு “தகைசால் தமிழர் விருது” அறிவித்து பாராட்டியது. விவசாயத்தொழிலாளர் அமைப்பில் மாநில, தேசிய அளவில் பொறுப்பு வகித்த இவர், 1992இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 வரை 13ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். 1967 - 1977 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டார். அதேபோல 1999-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். வெற்றி வாய்ப்பை இழந்தார்.
கட்டுரையாளர் : மாவட்டச் செயற்குழு உறுப்பினர், சிபிஎம், திருவண்ணாமலை