2025-ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு திங்கள் முதல் அறிவிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மேரி பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமொன் சகாகுச்சி ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 7-ஆம் தேதி இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் கிளார்க், மைக்கேல் எச்.டெவோரெட் மற்றும் ஜான் எம்.மார்டினிஸ் ஆகியோருக்கும், அக்டோபர் 8-ஆம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசு சுசுமா கிடகவா, ரிச்சர்டு ராப்சன் மற்றும் உமர் யாகி ஆகியோருக்கும், அக்டோபர் 9-ஆம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கும், அக்டோபர் 10-ஆம் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா நாட்டை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோய்கிர் (நெதர்லாந்து வம்சாவளி அமெரிக்க- இஸ்ரேல் பொருளாதார வரலாற்றாசிரியர்), பிலிப் அகியோன் (பிரான்ஸ் பொருளாதார நிபுணர்), பீட்டர் ஹோவிட் (கனடா பொருளாதார நிபுணர்) ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமையுடன் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான ஆய்வுக்காக இவர்கள் மூவருக்கும் வழங்ப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலமாக நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான நிபந்தனைகளை அடையாளப்படுத்தியதற்காக ஜோயலுக்கும், பழைய கொள்கைகளை நீக்கி புதிய கொள்கைகள் மூலமாக நீடித்த வளர்ச்சி என்ற ஆய்வுக்காக பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கும் வழங்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.