world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அரசியலில் பெண்களுக்கு  அதிக பிரதிநிதித்துவம் - ஜி ஜின்பிங் 

பாலின சமத்துவத்தை சரியாக உள் வாங்க வேண்டுமென்றால் அரசி யலிலும் அரசாங்கத்திலும் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தேவை என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். பெண்களை அரசியல் மற்றும் முடிவெடுக்கும் பணிகளில்  பங்கேற்கச் செய்வதற்கான வழிகளை அனைத்து நாடுகளும் அதிகரிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். சீனாவின் உயர்கல்வியில் 50 மற்றும் மொத்த வேலைவாய்ப்பில் 43 சதவீதத்திற்கு மேலாக பெண்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்கல்விக்காக அமெரிக்கா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு

அமெரிக்காவிற்கு உயர்கல்வி பயிலச் செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக் கை 44 சதவீதமாகச் சரிந்துள்ளது. 2023 இல் 93,833 மாணவர்கள் அமெரிக்காச் சென்ற நிலை யில் 2024 இல் 74,825 மாணவர்கள் உயர் கல்விக்காகச் சென்ற நிலையில் இவ்வாண்டு 41,540 ஆகச் சரிந்துள்ளது. டிரம்ப் வெளிநாடு களின் மீது போட்டு வரும் தடைகள் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதால் கல்விக்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. 

மடகாஸ்கரில் ஆட்சியை  கைப்பற்றும் ராணுவம் 

மடகாஸ்கரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா தெரிவித்துள்ளார். ஊழல், வேலையின்மை, நாட்டு வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத நிலையில் அந்நாட்டின் ஜென் இசட் தலைமுறையினர் ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தின் ஒரு பிரிவு இவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சி நடைபெறுகிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீண்ட தூரம் சென்று தாக்கும்  ஏவுகணைகளை கொடுப்பேன்- டிரம்ப்

ரஷ்யாவிற்குள் நீண்ட தூரம் சென்று தாக்கும் ‘டோமஹாக்’ ரக ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஏவுணை சுமார் 2,500 கி.மீ தூரம் தலைநகர் மாஸ்கோவையும் கடந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. மேலும் உக்ரைன் அந்த ஏவுகணைகளை கேட்பதாகவும் குறிப்பிட்டார். உக்ரைன்-ரஷ்யா போர்  முடிவுக்கு வரவில்லை என்றால் நான் இந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுப்பேன் என புடினிடமும் சொல்லுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

மெக்சிகோவில் கனமழை : பலி எண்ணிக்கை 47 

மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. அக்டோபர் 6 முதல் 9 வரை 540 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்தது. இதனால் நாடு முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டனர். 1,600 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 41 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போன 27 பேரைத் தேடும் பணிகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.