கொழும்பு
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் கணிக்க முடியாத அளவிற்கு நடந்து கொண்டிருக்கின்றன. இலங்கை நாட்டின் இந்த நிலைக்கு காரணம் ராஜபக்சே குடும்பம் தான் எனக் கூறி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்தா ராஜபக்சேவிற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் முக்கிய பங்கு சந்தையான கொழும்பு பங்குச்சந்தை ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடும் வீழ்ச்சியில் அவ்வப்போது தற்காலிகமாக சில மணி நேரங்கள் மூடப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல்முறையாக 5 நாள்களுக்கு மூடப்படுகிறது. இலங்கையின் பொருளாதார நிலைமைகளை சரிசெய்ய முதலீட்டாளர்களுக்கு கால அவகாசம் வழங்குவதற்காக கொழும்பு பங்குச் சந்தை அடுத்த வாரம் வரை நிறுத்துமாறு இலங்கையின் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் உத்தரவிட்டதால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.