world

img

பத்திரிகையாளர் அனஸ் அல் ஷரிஃப் படுகொலை – திட்டமிட்ட தாக்குதல் என இஸ்ரேல் ஒப்புதல்!

காசா இனப்படுகொலை உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய அல் ஜசீராவின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் அனஸ் அல் ஷரிஃப், இஸ்ரேல் குறிவைத்த தாக்குதலில் உயிரிழந்தார்.
காசாவில் நடைபெற்று வரும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் பல ஊடகப் பணியாளர்களின் உயிரையும் பறித்துள்ளன. அல் ஜசீரா தொலைக்காட்சியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் அனஸ் அல் ஷரிஃப், காசா இனப்படுகொலை தொடர்பான உண்மைகளை தன் உயிரை பணயம் வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தவர். அவர் கடந்த சில நாட்களாக ஆபத்தான சூழலில் இருந்து நேரடி தகவல்களை பரப்பி வந்தார்.
சனிக்கிழமை, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய குறிவைத்த வான்தாக்குதலில் அனஸ் அல் ஷரிஃப் உயிரிழந்தார். அவருடன் மேலும் நான்கு ஊடகப் பணியாளர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பின், இஸ்ரேல் அரசு வெளிப்படையாக “அவரை குறிவைத்து திட்டமிட்டு தாக்கினோம்” என அறிவித்தது.
அல் ஜசீரா நிர்வாகம், அனஸ் அல் ஷரிஃப்பின் மரணத்தை “ஊடக சுதந்திரத்திற்கும், உண்மையை வெளிப்படுத்தும் உரிமைக்கும் நேரிடையான தாக்குதல்” எனக் கண்டித்துள்ளது. சர்வதேச ஊடக அமைப்புகள், செய்தியாளர்களை குறிவைக்கும் இத்தகைய செயல்கள் போர் குற்றங்களாகக் கருதப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
காசா மீது இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பு தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அதில் ஊடகப் பணியாளர்களின் மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருவது, உலகளவில் கவலைக்குரியதாக மாறியுள்ளது.