மெக்சிகோவில் சிறிய ரக விமானம் ஒன்று சூப்பர் மார்க்கெட் ஒன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் அகாபுல்கோ நகரில் இருந்து விமானி உட்பட 4 பேருடன் சிறிய ரக விமானம் ஒன்று, பியூப்லா நகரை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது மத்திய மெக்சிகோவின் டெமிக்ஸ்கோ பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் திங்கட்கிழமை உள்ளூர் நிலவரப்படி 1.15 மணியளவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் விமானத்தில் இருந்து 4 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனைதொடர்ந்து படுகாயமடைந்த 5 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.