மெக்சிகோ ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கிளாடியா ஷின்பாம் இன்று பதவியேற்றார்.
மெக்சிகோவில் கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் மெக்சிகோவின் ஆளும் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் போட்டியிட்ட கிளாடியா ஷேன்பாம் 58 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து, மெக்சிகோவின் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதியாக 62 வயதான கிளாடியா ஷேன்பாம் பதவியேற்றார்.
இதையடுத்து, அடுத்த 6 ஆண்டுகளுக்கு மெக்சிகோவின் ஜனாதிபதியாக கிளாடியா ஷேன்பாம் தொடர்வார்.
உலகளவில் புகழ்பெற்ற பருவநிலை விஞ்ஞானியான கிளாடியா ஷேன்பாம், 2007-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பெருமைக்குரியவர். 2018-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அவர் மெக்சிகோ மாநகரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றார்.கடந்த 2000-த்திலிருந்து 2006 வரை நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இவர் பொறுப்பு வகித்துள்ளார்.
மெக்சிகோ மட்டுமன்றி, அமெரிக்கா, கனடா ஆகிய வல்லரசுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் எந்தவொரு பெண் வேட்பாளரும் இதுவரை வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.