டெஹ்ரான்:
வியன்னாவில் அமெரிக்காவும், ஈரானும் நடத்திய மறைமுகப் பேச்சுவார்த்தை புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதுஎன்று ஈரான் ஜனாதிபதி ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் ஈரான் - அமெரிக்கா அதிகாரிகள் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெற்றது.இந்தப் பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி, ‘‘ஒரு புதியஅத்தியாயம் தொடங்கியுள்ளது.
மேலும் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அதிகாரிகள் அனைவரும் நேர்மறையான மதிப்பீட்டையே வழங்கியுள்ளனர். ’’ என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு ஈரானுக்கு விதிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார்.
இந்த நிலையில், அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்துக்கு ஒவ்வாத வகையில் ஈரான் மீது போடப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த அறிவிப்பை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ளார். ஆனால் அதுபற்றிய கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை. வியன்னாவில் அமெரிக்காவும், ஈரானும் நடத்திய மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.