world

img

தீக்கதிர் உலகச் செய்திகள்...

சிட்னி

திரும்ப வரும் கலைப்பொருட்கள்

ஆஸ்திரேலியா தனது தேசிய அருங்காட்சியகத்திலிருந்து  இந்தியாவுக்குச் சொந்தமான 14 கலைப் பொருட்களை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.16 கோடிக்கும் அதிகமாகும். சிற்பங்கள், புகைப்படங்கள், கலை நுட்ப வடிவங்கள் உள்ளிட்ட இவற்றில் சில பொருட்கள் இந்தியாவிலிருந்து திருட்டுப் போனவை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சிலை கடத்தல் குற்றவாளியான சுபாஷ் கபூரின் கைவரிசை காரணமாக கடத்தப்பட்டு ஆஸ்திரேலியாவிற்குச் சென்றதும் இவற்றில் அடங்கும்.

                           **************

வாஷிங்டன்

கண்ணுக்கெட்டாத மீட்சி

அமெரிக்காவில் பொருளாதார மீட்சி என்பது இன்னும் கண்ணுக்கெட்டாத தூரத்திலேயே இருக்கிறது என்பதை அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வெளியிட்டுள்ள செய்தி உறுதிப்படுத்துகிறது. கொரோனா பாதிப்பு மிக முக்கியமான காரணமாக இதற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்னும் பல்வேறு துறைகள் மீட்பு நடவடிக்கைக்குள்ளாக வேண்டியுள்ளது என்றும் பல துறைகள் வேலைவாய்ப்பு என்பது இன்னும் வேகமெடுக்காத நிலையே இருக்கிறது என்றும் மேற்கண்ட அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது. 

                           **************

இஸ்லாமாபாத்

வேலை போய்விடும்!

பாகிஸ்தானில் ஆகஸ்ட் 31க்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்களுக்கு ஊதியம் நிறுத்தப்படும் என்று அந்நாட்டு ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வேயின் அனைத்து டிவிசன்களுக்கும் பாகிஸ்தான் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுவரை பாகிஸ்தானில் 2.7 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 10லட்சம் பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                           **************

பெய்ஜிங்

தலிபான்களுடன் பேச்சு

ஆப்கானிஸ்தானில் அரசுத் தரப்புக்கும் தலிபான்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. ஏற்கெனவே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சார்பாக ஆப்கன் விவகாரத்தில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு உதவி செய்ய தாம் தயாராக இருப்பதாக சீனா கூறியிருந்தது. இந்நிலையில் சீனா வெளியுறவு அமைச்சர் வாங்-யீ தலிபான்களுடன் பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளார். ஆப்கானிஸ்தானில் ஒரு கொடிய உள்நாட்டு போர் ஏற்படுவதை தவிர்ப்பதில் தலிபான்களே முக்கியப் பங்கினை வகிக்க முடியும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. சீனாவுடனான பேச்சு குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் மற்றும் அமைதி நடவடிக்கைகள் குறித்து சீனாவிடம் தெரிவித்தோம்  எனக் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

                           **************

டெஹ்ரான்

நம்பாதீர்கள்!

மேற்கத்திய நாடுகளை நம்புவது என்பது எந்தவிதத்திலும் உதவி செய்யாது என்பதையே நீண்டகால அனுபவம் காட்டுகிறது என்று ஈரான்மதத் தலைவர் அயத்துல்லா அலி கோமேனி கூறியுள்ளார். அமெரிக்கா உள்பட உலகின் மேற்கத்திய நாடுகள் அனைத்துடனும் மோசமான அனுபவமே ஈரானுக்கு இருக்கிறது என்றும் அவர்களை நம்புவது ஒரு போதும் கூடாது என்றும் ஈரானின் எதிர்காலத் தலைமுறை இந்த அனுபவத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி மற்றும் அவரது அமைச்சரவையின்உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற பிரிவுஉபசார நிகழ்வில் கோமேனி மேற்கண்டவாறு கூறினார். ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக ஆகஸ்ட் 5 அன்று இப்ராகிம் ரெய்சி பதவியேற்கிறார்.

                           **************

நியூயார்க்

தடுப்பூசி போட்டால் சன்மானம்

அமெரிக்காவில் கோவிட் 19 வைரசின் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு சமீபநாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசிசெலுத்தும் பணி மந்தமாகவே இருந்துவருகிறது. குறிப்பாக அதிக பாதிப்புக்குள்ளான நியூயார்க் மாநகரத்தில் இன்னும் 40.8சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை முதல் மாநகரின் எந்தவொரு மருத்துவமனையிலும் சென்றுதடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும்அப்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபருக்கு 100 டாலர் (ரூ.7400) சன்மானமாக அறிவிக்கப்படும் என்று நியூயார்க் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

                           **************

புதுதில்லி

பிளிங்கன் வருகை

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் புதனன்று இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக தில்லி வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் நேரில் சந்தித்து பேசினார். இந்தியா - அமெரிக்கா இடையிலான கேந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கான முறையில் ஜனாதிபதி பைடன் விடுத்துள்ள அழைப்பை ஏற்றுக்கொள்வதாக பிளிங்கனிடம் பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்தார். முன்னதாக பிளிங்கன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்துப் பேசினார். 

                           **************

புதுதில்லி

கூடுதலாக 2.5 கோடி டாலர்

இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்காக கூடுதலாக 2.5 கோடி டாலர் நிதி தருவதாக அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். ஏற்கெனவே இப்பணிக்காக 20 கோடி டாலர் நிதியை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக பிளிங்க்கன் கூறுகையில், கொரோனா தொற்று துவங்கிய காலக்கட்டத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவியதை மறக்கமாட்டோம் என்றும் தற்போதைய நிதி உதவி இந்தியாவுக்கு தடுப்பூசி கிடைப்ப தற்கான ஏற்பாடுகளுக்கு உதவும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

                           **************

வாஷிங்டன்

ரஷ்யா மீது பாய்ச்சல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களை சீர்குலைக்க முயற்சிப்பதாக அமெரிக்க தலைவர்கள் அவ்வப்போது ரஷ்யா மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். அதேபோன்றதொரு குற்றச்சாட்டை மீண்டும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சுமத்தியுள்ளார். 2022ல் அமெரிக்காவில் நடைபெற உள்ள இடைக்காலத் தேர்தல்களை சீர்குலைக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக பைடன் கூறிக் கொண்டுள்ளார். இணையவெளி யில் நடைபெறும் இதுபோன்ற மோதல்கள் உண்மையான போருக்கு இட்டுச்செல்லும் என்றும் பைடன் மிரட்டல் விடுத்துள்ளார்.

                           **************

காபூல்

95 சதவீதம் வாபசாம்!

ஆப்கானிஸ்தானிலிருந்து 95சதவீத அமெரிக்க படையினர் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் ஒட்டுமொத்த அமெரிக்கப் படையினரும் ஆப்கனை விட்டு வெளியேறி விடுவார்கள் என்று அமெரிக்க ராணுவத்தின் மத்தியப் பிரிவு தளபதி பிராங்க் மெக்கின்சி தெரிவித்துள்ளார். எனினும் சில இடங்களில் தலிபான்களின் தாக்குதல் களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் கடந்த சில நாட்களாக ஆப்கானியபடைகளுக்கு ஆதரவாக சில இடங்களில் அமெரிக்கப் படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் பிராங்க் தெரி வித்தார்.