india

img

தீக்கதிர் உலகச் செய்திகள்...

யாங்கோன்

கொந்தளிக்கும் மியான்மர்

கடந்த பிப்ரவரி 1 அன்று மியான்மரில் ராணுவம் கலகம் நடத்தி ஆட்சியைக் கைப்பற்றியது. இதை எதிர்த்து அங்கு தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 2020 தேர்தலில் மியான்மர் ஜனநாயக இயக்கத் தலைவரான ஆங் சாங் சூகியின் கட்சி பெற்ற வெற்றியை ரத்து செய்து ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது அங்கு மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                            **************

வாஷிங்டன்

தடை நீட்டிப்பு

கொரோனா வைரசின்  டெல்டா வகை வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பிய யூனியன், சீனா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு பயணிகள் வருவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாத உள்நாட்டு மக்களுக்கு இதனால் மிகப்பெரும் ஆபத்து நேரிடும் என்ற காரணத்தை பைடன் அரசு சுட்டிக்காட்டியுள்ளது. 

                            **************

சியோல்

மீண்டும் ‘ஹாட்லைன்’

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே இருந்து வந்த நேரடி ஹாட்லைன் மூலமான அரசுத் தொடர்பு 2020 ஜுன் மாதம் நிறுத்தப்பட்டுவிட்டது. எல்லையைத் தாண்டி ஊடுருவல் பேர்வழிகளை தென்கொரியா அனுப்புகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த வடகொரியா, அந்தத் தொடர்பை துண்டித்துக் கொண்டது. இந்நிலையில் மீண்டும் தற்போது அரசுகளுக்கு இடையிலான ஹாட்லைன் தொடர்பை புதுப்பித்துக் கொண்டுள்ளனர். 

                            **************

பாக்தாத்

‘போர் பகுதி அல்ல’

இராக்கை மிகக்கடுமையாக சிதைத்து அழித்த அமெரிக்கா தற்போது அங்கிருந்து தனது படைகளை முழுமையாக இந்த ஆண்டு இறுதிக்குள் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. “இராக்கில் எங்களது பங்கு ஐஎஸ் பயங்கரவாதிகளை எதிர்கொள்வது, இதற்கு இராக்கிய ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது, உதவி செய்வது என்பதாக இனி இருக்கும்; ஒரு போர் பகுதியாக இருக்காது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். முன்னதாக வெள்ளை மாளிகையில் பைடனை இராக் பிரதமர் முஸ்தபா அல் காதமி சந்தித்தார்.

                            **************

இஸ்லாமாபாத்

எல்லை திறப்பு

ஆப்கனில் தலிபான்கள் தங்களது நிலைகளை பலப்படுத்திய பின்னணியில் அண்டை நாடுகளுடனான எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆப்கனுடனான சமன் - ஸ்பின்போல்டாக் பகுதி எல்லையை பாகிஸ்தான் திறந்துவிட்டுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இந்த எல்லை அமைந்துள்ளது. தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில்  எல்லை திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                            **************

திரிபோலி

‘புலம்பெயர்’ துயரம்

லிபியாவில் கும்ஸ் பகுதிக்கு அருகே அங்கிருந்து புலம்பெயர்ந்து செல்லும் நோக்கத்துடன் புறப்பட்ட மக்களின் படகு கடலில் கவிழ்ந்தது. இதில் 57 பேர் பலியாகினர். மொத்தம் 75 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. எஞ்சியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். லிபியாவில் அமெரிக்கா நடத்திய அட்டூழியங்களுக்குப் பிறகு அந்நாட்டில் வாழ வழியின்றி தொடர்ந்து மக்கள் சிறு-சிறு குழுக்களாக பிழைப்பு தேடி ஐரோப்பிய நாடுகளை நோக்கியும், பிற நாடுகளை நோக்கியும் இடம்பெயர்வது தொடர்கிறது.

                            **************

பெய்ஜிங்

சீனாவின் வியூகம்

சர்வதேச அளவில் சீனா இணையதள வழியிலான தாக்குதலை ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது நாட்டின் இணைய வெளியில் செயல்பட்டு வரும் செயலிகளை முழுமையாக மாற்றி அமைப்பது, பயணர்களின் உரிமைகள் மற்றும் விபரங்களை பாதுகாக்கும் விதத்தில் மாற்றங்களைச் செய்வது, அதிகாரப்பூர்வமற்ற இணைய தொடர்புகளை துண்டிப்பது உள்பட 22 விதமான வழிமுறைகளை காண்பது என சீனா முடிவு செய்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சீன அரசு வெளியிட்டுள்ளது.

                            **************

டூனிஸ்

துனீஷ்யாவில் கொந்தளிப்பு

துனீஷியாவில் கொரோனா பெருந்தொற்றை திறம்பட எதிர்கொள்ளாத பிரதமர் ஹைசிம் மெச்சிச்சிக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடியில் தீவிரமடைந்துள்ள நிலையில் அரசு மக்களை கைவிட்டுவிட்டதாகக் கூறி துவங்கிய போராட்டம் வன்முறைக் களமாக மாறியது. இந்நிலையில் ஞாயிறன்று பிரதமர் அப்பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்த துனீஷிய ஜனாதிபதி கெய்ஸ் சையது, நாடாளுமன்றத்தை 30 நாட்களுக்கு முடக்கி அறிவித்துள்ளார்.  ஜனாதிபதியின் இந்த அறிவிப்பும் மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                            **************

காபூல்

ஆயுத வியாபாரம்

ஆப்கனிலிருந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள், ஆப்கன் அரசின் படைகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு புறம் அமைதிக்கான பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தலிபான்களுக்கு எதிரான மோதலில் ஆப்கன் படையினருக்கு உதவிட போர் விமானங்களை அளிக்கத் தயார் என்று அமெரிக்கா தனது வியாபார அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 

                            **************

பெய்ரூட்

‘பணக்கார பிரதமர்’

லெபனானில்  கடந்த ஆண்டு தலைநகர் பெய்ரூட்டில் மிகப்பெரும் குண்டுவெடிப்பு நடந்தது. பெரும் சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு அரசு பதவிவிலகி இடைக்கால அரசு நிர்வாகம் நடந்து வந்தது. ஓராண்டு காலத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் கூடி நஜீப் மிகாதி என்பவரை பிரதமராக தேர்வு செய்துள்ளது. இவர் லெபனானின் பெரும் பணக்கார தொழிலதிபர் ஆவார். நாடாளுமன்றத்தில் இவருக்கு ஆதரவாக 118 பேர் வாக்களித்தனர். தொடர்ச்சியான அரசியல் நெருக்கடி காரணமாக லெபனான் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கியுள்ளது.