பிரிட்டனில் குடியேற கட்டுப்பாடு : கோடீஸ்வரர்களுக்கு மட்டும் வாய்ப்பு
பிரிட்டன் குடியேற்ற விதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப் பெரிய மாற்றங்களை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. வெளிநாட்டினர் பிரிட்டனில் 5 ஆண்டுகள் வேலை பார்த்தாலே நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், புதிய விதியின்படி, இனி 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.1 கோடியே 46 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள், அந்நாட்டில் முதலீடு செய்யும் பணக்காரர்கள் மட்டும் 3 ஆண்டுகளில் குடியுரிமை பெறலாம். ஆண்டுக்கு 58 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் 5 ஆண்டுகளில் குடியுரிமை பெறலாம்.
வங்கதேச நிலநடுக்கம்: 10 பேர் பலி
வங்கதேசத்தில் வெள்ளிக்கிழமை 5.5 ரிக்டர் அளவிலும் சனிக்கிழமை 3.3 ரிக்டர் அளவிலும் தொடர் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். வங்கதேசம் புவியியல் ரீதியாக நிலநடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது. நீண்ட காலமாகவே பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்ற ஆபத்தான கட்டத்தில் அந்நாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜி-20 மாநாடு : ஆப்பிரிக்காவில் துவங்கியது
ஜி-20 உச்சி மாநாடு சனிக்கிழமை தென் ஆப்பிரிக்காவில் துவங்கியுள்ளது. மாநாட்டின் போது நடந்த ரகசிய ஆலோசனைக் கூட்டத்தின் பேச்சு, தவறுதலாக ஒலிபெருக்கியில் வெளியே கேட்டுள்ளது. அதில் “மிகப்பெரும்பாலான நாடுகள் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. எனவே, அமெரிக்கா இல்லாவிட்டாலும் அந்தத் தீர்மானத்தை இப்போதே நிறைவேற்றுவோம்,” என்று தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா பேசியுள்ளார்.
லெபனான் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு
லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. நவம்பர் 18 அன்று தெற்கு லெபனானில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் குண்டு வீசி 13 பேர்களை படுகொலை செய்தது தெரிய வந்துள்ளது. இது சர்வதேசச் சட்டத்தை மீறிய செயல். இஸ்ரேல் செய்துள்ளது போர்க்குற்றம். மேலும் இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து கொடூரமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது என ஐ.நா சிறப்பு நிபுணர் டிட்பால்-பின்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
நியூயார்க் மேயர் : மம்தானி - டிரம்ப் சந்திப்பு
நியூயார்க் மேயராக வெற்றி பெற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானி வெள்ளை மாளிகையில் டொனால்டு டிரம்ப்பை சந்தித்துப் பேசியுள்ளார். சந்திப்புக்கு பிறகு மம்தானியுடன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இது ஒரு சிறந்த சந்திப்பு. உண்மையிலேயே பலன் தரக்கூடியதாக இருந்தது என்று கூறியுள்ளார். சந்திப்பிற்கு முன்பு மம்தானி பேசும்போது, நியூயார்க்கில் வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்கும் எனது திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல யாரைச் சந்திக்கவும் தயாராக உள்ளேன். அதுதான் எனது நிலைப்பாடு என்று கூறியிருந்தார்.
