ஏதென்ஸ், ஜன.1 - கிரீஸ் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுவதுடன் விவசாயிகளின் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசாங்கத்தின் செயல்பாட்டுக்கு எதிராக அந்நாட்டு ராணுவ வீரர்கள் இடையே அதிருப்தியும் போராட்டக்குரலும் அதிகரித்து வருகிறது. கிரீஸின் பொருளாதார நெருக்கடி மற்றும் ராணுவக் கொள்கைகளைப் பற்றி விமர்சித்த ‘மனோஸ் பாபஜியோர்கியூ’ என்ற ராணுவ வீரருக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தண்டனை வழங்கியுள்ளது. கிரீஸ் நாடானது நேட்டோ ராணுவக் கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ளது. அந்த கூட்டமைப்பின் கடந்த மாநாட்டு முடிவு நேட்டோ உறுப்பினராக உள்ள ஒவ்வொரு நாடும் உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதத்தை ராணுவத்திற்கு செலவு செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தியது. சில நாடுகள் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில்பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில் இந்த முடிவுக்கு துவக்கம் முதலே மக்களிடையே எதிர்ப்பு நிலவி வருகிறது.
எனினும் பல ஐரோப்பிய நாடுகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி சமூக நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டி விட்டு ராணுவத்திற்கு அதிகம் நிதி ஒதுக்கி வருகின்றன. சமீபத்தில் கிரீஸ் அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது. அதில் “மக்களின் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான நிதியைக் குறைத்துவிட்டது. மாறாக ஆயுதங்களை வாங்கிக் குவிக்க கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கியது. இந்த நடவடிக்கைக்கு ராணுவ வீரர் மனோஸ் பாபஜியோர்கியூ பகிரங்கமாக விமர்சனம் தெரிவித்தார். மேலும் தென் அமெரிக்க நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்தி வரும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கும் தனது ஆதரவை தெரிவித்தார். இது ராணுவ ஒழுக்கத்தை மீறிய நடவடிக்கை எனக் கூறி, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் அவருக்கு 25 நாட்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.மேலும் அவரை ‘சிறப்புப் படை’ பிரிவிலிருந்தும் நீக்கியுள்ளது. இந்தத் தண்டனை உத்தரவுக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது, நூற்றுக்கணக்கான இளம் ராணுவ வீரர்கள் மனோஸிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். “மக்களின் கஷ்டங்களைப் பேசுவது குற்றமல்ல” என்று அவர்களும் போராட்டக்குரலை எழுப்பி வருகின்றனர். ராணுவச் சீருடை அணிந்திருந்தா லும், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மக்களின் பக்கம் நிற்கும் உரிமை உண்டு. அது குற்றம் அல்ல என பல்வேறு தொழிற்சங்கங்கள் அரசுக்கு கண்டனங்கள் தெரிவித்துள் ளன. கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி (KKE) இந்தத் தண்டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது.
