குழந்தைகளுக்கான நிதியையும் நிறுத்திய டிரம்ப்
அமெரிக்காவில் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு வழங்கி வந்த நிதியையும் டிரம்ப் நிறுத்தியுள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள குழந்தைப் பராமரிப்பு மையங்களில் பெரிய அளவில் நிதி முறைகேடு நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கர்களுக்கு பயணக் கட்டுப்பாடு: மாலி, புர்கினோபாசோ பதிலடி
ஆப்பிரிக்க நாடுகள் உட்பட 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் டிரம்ப் தடை விதித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மாலி, புர்கினா பாசோ ஆகிய நாடுகள் தற்போது அமெரிக்கக் குடிமக்கள் தங்கள் நாடுகளுக்கு வரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தங்கள் குடிமக்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள அதே கட்டுப்பாடுகளை, தற்போது அமெரிக்கக் குடிமக்கள் மீதும் இந்த இரு நாடுகளும் விதித்துள்ளன. நைஜர் அரசும் விரைவில் இந்த முடிவை அறிவிக்கும் என கூறப்படுகிறது.
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் - 2025 இல் மிக அதிகம்
2025 இல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் சுமார் 128 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பத்திரிகையாளர் அமைப்பும் ஒவ்வொரு எண்ணிக்கை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. காசாவில் நடக்கும் போரின் காரணமாக பாலஸ்தீனத்தில் மட்டும் 255-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன பத்தி ரிகையாளர் சங்கத்தின் தலைவர் நாசர் அபு பக்கர் ஏற்கனவே ஐ.நா அவையில் தெரிவித்திருந்தார்.
காங்கோ வன்முறை: ஒரு மாதத்தில் 1,500 பொதுமக்கள் பலி
காங்கோ ஜனநாயகக் குடியரசில் 2025 டிசம்பர் மாதத்திலிருந்தது உள்நாட்டுப்போர் அதிகரித்து வருகிறது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு காங்கோ பகுதி பல ஆண்டுகளாகவே அமைதியற்ற சூழலைச் சந்தித்து வருகிறது. 2021 இன் பிற்பகுதியில் ‘மார்ச் 23 இயக்கம்’ (எம்23) எனும் ஆயுதக்குழு மீண்டும் ஆதிக்கம் செலுத்த துவங்கிய பிறகு நிலைமை மோசமடைந்துள்ளது.
பாலைவனத்தில் ரயில் பாதை : சீனா சாதனை
சஹாரா பாலைவனத்தில் கனரக ரயில் பாதை கட்டமைப்பை சீனா நிறைவு செய்துள்ளது. 575 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் பாதை அல்ஜீரியாவில் சீன நிறுவனம் மேற்கொண்ட மிகப்பெரிய ஒற்றை உட்கட்டமைப்புத் திட்டமாகும். இது சீன ரயில்வே கட்டுமானக் கழகம் அல்ஜீரிய அரசு நிறுவனங்க ளால் இணைந்து கட்டப்பட்டுள்ளது. இரு நாட்டு ஊழியர்களும் சரியான திட்டமிடல் அடிப்படையில் கடந்த 24 மாதங்களாக உழைத்து, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
