தேர்தலில் தோற்றாலும் அதிக ஆயுதங்கள் கொடுக்க முடிவு
ரஷ்யா உடனான போர் எக்காரணத்தைக் கொண்டும் நின்று விடக்கூடாது என உக்ரை னுக்கு 2025 ஆம் ஆண்டுக்கும் தேவையான ஆயுதங்களை முடிந்தவரை அதிகமாக கொடுக்க பைடன் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.டிசம்பர் மாதத்துடன் பைடனின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இந்த கடைசி மாதத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆயுதங்களை உக்ரைனுக்கு கொடுக்கப் போகிறோம் என அமெ ரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஒத்துழைப்பு குழுவுக்கு நைஜரில் தடை
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான உதவிக் குழுவை அந்நாட்டில் பணிபுரிய நைஜர் ராணுவ அரசு தடை விதித்துள்ளது.அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அக்குழு செயல்பட தடை விதித்ததை குறிப்பிட்டுள்ளது. பிரான்ஸ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான பொம்மை ஆட்சியை அகற்றிய ராணுவத் தலைமை பிரான்ஸ் ராணுவம் உட்பட அந்நாட்டைச் சேர்ந்த எல்லா அமைப்புகளையும் ஒவ்வொன்றாக வெளியேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
லெபனான்: மீதான தாக்குதல் தொடரும் : இஸ்ரேல் அமைச்சர்
லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தப் போவதில்லை; அது தொடர்ந்து நடை பெறும் என இஸ்ரேலின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப் பின் மீது தாக்குதல் நடத்துவதாக அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட் உட்பட பல நகரங்களில் பொது மக்களின் கட்டிடங்கள் மீது குண்டு வீசிவருகிறது. புதன்கிழமையன்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தலைநகரின் மையப்பகுதியில் உள்ள கட்டிடத்தின் மீது குண்டு வீசியது குறிப்பிடத்தக்கது.
போலந்தில் அமெ., ராணுவத்தின் புதிய ஏவுகணைத்தளம்
வடக்கு போலந்தில் அமெரிக்க அரசு புதிய ஏவுகணைத் தளத்தை அமைத்துள்ளது. இதற்கு ரஷ்ய அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ள ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா பல ஆண்டுக ளாக தனது ராணுவ கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது. ராணுவம் மூலம் ரஷ்ய எல்லைகளை சுத்தி வளைப்பதன் மூலம் அந்நாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியில் தற்போது நேட்டோ உறுப்பினரான போலந்தில் தனது ஏவுகணைத்தளங்களை மேம்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
‘மரீன் லு பென்னுக்கு சிறைத் தண்டனை கொடுக்க வேண்டும்’
பிரான்ஸ் நாட்டில் உள்ள தீவிர வலதுசாரியான தேசிய பேரணி கட்சியின் தலைவரான மரீன் லு பென்னுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்க கோரியுள்ளார் பிரான்ஸ் வழக்கறிஞர். பென்னும் அவ ருடைய கூட்டாளிகளும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பை மோசடி செய்த வழக்கில் இவ்வாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த வழக்கை தற்போது தீவிரப்படுத்துவது 2027 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பென் மற்றும் அவரது கட்சிக்கு நெருக்கடியை கொடுக்கும் என கூறப்படுகிறது.