எரிபொருள் நெருக்கடி, அதிகரித்துள்ள பணவீக்க விகிதங்கள் மற்றும் சுருங்கும் உலக வர்த்தகம் ஆகியவற்றால் ஏற்கனவே மந்த நிலையை ஜெர்மனி எட்டி விட்டது என்று அந்நாட்டின் பொருளாதார ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அந்த மையத்தின் பொருளாதார வல்லுநர் கிடோ பால்டி, "துரதிருஷ்டவசமாக, கண்ணுக்கு எட்டிய வரையில் தீர்வு எதுவும் தென்படவில்லை. ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஐந்து விழுக்காடு வரையில் சரிவைக் காணப் போகிறது. கடுமையான எரிபொருள் விலையேற்றத்தால் வாங்கும் சக்தியில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் நட்டத்தில் மூழ்கும் ஆபத்து உருவாகியிருக்கிறது" என்றார்
மேலும் பேசிய அவர், "ஏற்றுமதிக்கு முன்னுரிமை தரும் ஜெர்மனிக்கு கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி ஆகியவை கூடுதல் சுமைகளாகி விட்டன. ஆகஸ்டு மாதத்தில் ஜெர்மனியின் பணவீக்கம் 7.9 விழுக்காடாக அதிகரித்தது. எரிபொருள் விலைகள் 35.6 விழுக்காடு அதிகரித்ததே இந்தப் பணவீக்க உயர்வுக்குக் காரணமாக இருந்துள்ளது. அதோடு, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பொருட்களுக்கான கிராக்கி குறைந்ததால், நிறுவனங்களுக்கு வேலைகள் கிடைக்கவில்லை " என்று குறிப்பிட்டார்.
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்தை ஜெர்மனி சந்தித்து வருகிறது. பல்வேறு நெருக்கடிகளில் சிக்காமல் தப்பித்த ஜெர்மனி தற்போது மந்த நிலையில் விழுந்து விட்டது என்று பெர்லினில் இருந்து இயங்கும் இந்தப் பொருளாதார ஆய்வு மையத்தின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டதாக ஜெர்மனி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.