பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, பதவியேற்று சில வாரங்களிலேயே ராஜினாமா செய்ததால், அந்த நாட்டின் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.
இன்று வெளியிட்ட அறிக்கையில் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மக்ரோன், தன்னுடைய நெருங்கிய நம்பிக்கையாளர் லெகோர்னுவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில், லெகோர்னு ஞாயிற்றுக்கிழமை மாலை தனது அமைச்சரவை உறுப்பினர்களை அறிவித்திருந்தார்.
அந்த அமைச்சரவை தனது முதல் கூட்டத்தை திங்கட்கிழமை மதியம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதன் அமைப்பு எதிர்க்கட்சியினரையும், ஆளும் தரப்பினரையும் அதிருப்தியடைய வைத்தது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லெகோர்னு, கடந்த இரண்டு ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட ஐந்தாவது பிரதமராகும்.
ராஜினாமா குறித்த தெளிவான விளக்கத்தை லெகோர்னு இதுவரை அளிக்காவிட்டாலும், இடதுசாரி மற்றும் வலதுசாரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் சமரசம் காணமுடியாமல் போனதும், நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவு இல்லாததுமே காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன.