திருவனந்தபுரம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நடத்த முயன்ற தாக்குதல் சம்பவத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்திற்கு சங்பரிவார் அமைப்புகள் பரப்பும் வெறுப்பு அரசியலே நேரடிக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில், " உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நடத்த முயன்ற தாக்குதல் சம்பவத்திற்கு கடுமையான கண்டனம்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், சங்பரிவார் அமைப்புகள் பரப்பும் வெறுப்பு அரசியலின் நேரடியான பிரதிபலிப்பு ஆகும். இச்சம்பவத்தை ஏதோவொரு தனிநபர் செயல் என்று கூறி எளிதாக ஒதுக்கித் தள்ளுவது, நாட்டில் வளர்ந்து வரும் சகிப்புத்தன்மையற்ற (Intolerance) சூழலை அலட்சியப்படுத்துவதாகும்.
தேசத்தின் தலைமை நீதிபதியையே குறிவைக்கும் அளவிற்கு மத அடிப்படை வாதம் தைரியம் பெறுகிறது என்றால், அது பிளவுபடுத்தும் மற்றும் விஷத்தன்மை வாய்ந்த அரசியல் எந்த அளவிற்குப் பேராபத்தை விளைவிக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்தப் பேராபத்தை எவ்விதத் தயக்கமும் இன்றி நாம் எதிர்த்து நின்றே ஆகவேண்டும்." என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஒரு வழக்கின் விசாரணையை தொடங்கியபோது, அவர் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணியை வீச முயன்றார். ஆனால், அமர்வின் முன்னாலேயே விழுந்தது. இந்த சம்பவம் காரணமாக அங்கே பரபரப்பு ஏற்பட்டது. காலணியை வீசிய ராகேஷ் கிஷோர் உடனடியாக நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர், "சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது" என்று கூச்சலிட்டார். என்பது குறிப்பிடத்தக்கது.