சென்னை: விஷ வாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வலியுறுத்தி இன்று (அக்.6) சிஐடியு-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கொளத்தூரில் பாதாளச் சாக்கடை அடைப்பைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளி குப்பன், விஷ வாயு தாக்கி உயிரிழந்தார். அவரை மீட்க முயன்ற சங்கர் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விஷ வாயு தாக்கி உயிரிழந்த ஒப்பந்தத் தொழிலாளி குப்பன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பொறுப்பான அதிகாரி மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், தீவிரச் சிகிச்சை பெற்றும் வரும் மற்ற இரண்டு ஒப்பந்தத் தொழிலாளர்களான சங்கர் மற்றும் ஹரிஹரன் ஆகியோருக்குத் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று தொழிலாளர் சங்கத்தின் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ் தலைமை தாங்கினார்.