world

img

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்காமல் காலனியாதிக்க மனநிலையில் வளர்ந்த நாடுகள்.... உலக சுகாதார நிறுவனம் சாடல்....

ஜெனீவா:
ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்காமல் வளர்ந்த நாடுகள் காலனியாதிக்க மனநிலையில் செயல்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் சாடியுள்ளது. 

உலகையே அச்சுறுத்திய  கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. வளர்ந்த நாடுகளிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வளர்ந்து வரும் நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் வழங்குவதற்காக கோவேக்ஸ் என்ற திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.இந்த கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் இதுவரை 132 நாடுகளுக்கு 9 கோடி தடுப்பூசிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் கொரோனா 2 ஆவது அலை தீவிரமானதால், தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தி வைத்தது. சில வளர்ந்த நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு மட்டுமே வைத்துள்ளன. இதன் காரணமாக கோவேக்ஸ் திட்டத்தில் தடுப்பூசிக்கு பெருமளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இது மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்துதெரிவித்து வருகிறது. 

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறுகையில், சில வளர்ந்த நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுவது மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.ஆனால் தங்கள் உபயோகத்திற்கு மட்டுமே தடுப்பூசியை அவை பயன்படுத்துகின்றன. தடுப்பூசிகளை சரியாக பாதுகாக்கும் நல்ல கட்டமைப்பு ஏழை நாடுகளுக்கு இல்லை என வளர்ந்த நாடுகள் கூறுகின்றன. இது அவர்களின் காலனியாதிக்க மனநிலையை காட்டுகிறது. 

வளர்ந்து வரும் நாடுகளிலும் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தடுப்பூசிகளை சேமித்து வைக்கவும், அவற்றைபொதுமக்களுக்கு செலுத்தவும் நல்ல கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே காரணமாக கூறாமல் தயவு செய்து கொரோனா தடுப்பூசியை தாருங்கள் என வளர்ந்த நாடுகளை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.