world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஐ.நா. அமைதிப் படை மீது  இஸ்ரேல் குண்டு வீச்சு

லெபனானில் ஐ.நா அமைதிப் படை யின் ரோந்து வாகனத்தின் மீது இஸ்ரேல் ராணுவம்  குண்டு வீசியுள்ளது. இது சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என ஐ.நா  கண்டித்துள்ளது. மேலும் இஸ்ரேல் ராணு வத்தின் பீரங்கி ஐ.நா அமைதிப் படை வாக னத்தை நோக்கிச் சுட்டது. இந்தத்  தாக்குதலில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. அத் தாக்குதல் நடந்த அதே பகுதியில் முன்னதாக இஸ்ரேல் ராணுவம் டிரோன்கள் மூலமாக அமைதிப் படையினர் மீது தாக்குதல் நடத்திய தாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை  ரஷ்யா மீதான தடைகள் சிக்கலாக்கும்

ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட புதிய தடைகள் அமெரிக்காவுடனான உறவுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளை சிக்கலாக்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தடை நடவடிக்கைகள்  நட்பற்ற நடவடிக்கை தான். எனினும் அமைதியை நோக்கிய உறவு களை மீட்டெடுக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்று அர்த்தமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

லத்தீன் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் : அமெரிக்காவுக்கு  வெனிசுலா கண்டனம்

கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் அக்டோபர் 26 முதல் 30 வரை போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் போர்ப் பதற்றத்தைத் தூண்டு கின்ற மற்றும் அச்சுறுத்தலை உருவாக்குகின்ற நடவடிக்கை. அமைதியான கரீபியன் மண்ட லத்தின் அமைதியை குலைக்கும் நடவடிக்கை.  ஒரு காலனித்துவ பாணியிலான ஒரு நாட்டை அடிமையாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி என இதனை வெனிசுலா அரசு கடுமையாக கண்டித்துள்ளது. 

மாலியில் எரிபொருள் பற்றாக்குறை:  பள்ளி, கல்லூரிகள் மூடல்

மாலியில் எரிபொருள் பற்றாக்குறை யால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள் ளன. பிரான்ஸ் ஆதரவில் இயங்கி வருகின்ற அல்கொய்தா பயங்கரவாதிகள் அந்நாட்டு தலை நகருக்கு எரிபொருள் கொண்டு செல்ல விடாமல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட பல சேவைகள் முடங்கி வருகின்றன. இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு வகுப்புகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஊழல் வழக்கில் ஆஜராக    நேதன்யாகுவிற்கு நீதிமன்றம் உத்தரவு 

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் மீதான ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகும் நாட்களின் எண்ணிக்கையை வாரத்திற்கு மூன்றாக குறைக்க வேண்டும் என அவரது தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும் வாரத்திற்கு நான்கு நாட்கள் நேதன்யாகு ஆஜராக வேண்டும் எனவும் அவர் மீதான ஊழல் விசாரணைகள் திட்டமிட்டபடி தொடரும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மூன்று வாரமாக முடங்கி இருக்கும் அமெரிக்க அரசு

நியூயார்க்,அக்.27- அமெரிக்க அரசு மூன்றாவது வாரமாக முடங்கி யுள்ளது. இதனால் 14 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் உள்ளனர். இதில் பலர் கட்டாய விடுப்பில் உள்ளனர். பலர் ஊதியம் இல்லாமல் வேலை செய்து வருகின்றனர்.  அரசு முடக்கத்தின் பின்னணி கடந்த ஜூலை மாதம் டிரம்ப் கையெழுத்திட்ட “ஒன் பியூட்டிபுல் பில் மசோதாவை” அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார். இம்மசோதா அரசு செலவினங்களை குறைப்ப தற்காக சுகாதாரத் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை வெட்டுவதற்கு வழிவகை செய்கிறது. இந்த நிதி வெட்டப்பட்டால் சுகாதாரச் சேவை பெற்று வருகிற சுமார் 7 கோடி மக்களை நேரடியாகப் பாதிக்கும். குறைந்த ஊதியம் பெரும் மக்களின் வாழ்க்கைக் கான அத்தியாவசியச் செலவுகளை மேலும் அதிகரிக்கும் ஆபத்து உருவாகிவிடும்.  மேலும் இந்த முடக்கம் நவம்பர் வரை தொ டர்ந்தால், 4.2 கோடி அமெரிக்க மக்களுக்கு வழங்கப்படும் துணை ஊட்டச்சத்து உதவித் திட்டம். 70 லட்சம் பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு துணை ஊட்டச்சத்து திட்டமும் முடங்கும். இது அமெரிக்கா மக்களின் உணவு பாதுகாப்பை அழித்து விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  டிரம்ப் கொண்டு வந்த இம்மசோதா தொடர்பாக ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஜனநாயகக் கட்சி யினர் குடியரசுக் கட்சி முன்மொழிந்த நிதி மசோ தாவிற்கு ஆதரவு கொடுக்க மறுத்து விட்டனர். எனவே அக்டோபர் 1 முதல் அந்நாட்டு அரசு முடங்கியுள்ளது. பழி சுமத்தும் நடவடிக்கை இந்நிலையில் தற்போதைய நிதி முடக்கத் தைத் தொடர்ந்து மக்கள் கேள்வி எழுப்பி விடக் கூடாது என்பதற்காக, இரு கட்சிகளும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.  இந்த முடக்கத்திற்கு ஜனநாயகக் கட்சிதான் காரணம் என டிரம்ப் விமர்சிக்கும் அதே வேலை யில் நிதி முடக்கம் துவங்கிய பிறகு எட்டு அரசு நிறுவனங்களில் இருந்து சுமார் 4,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்திற்கு டிரம்ப் உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கில் பணி நீக்கம் செய்யக்கூடாது என அந்நாட்டின் கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில் இந்தப் பணிநீக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.  அதேபோல ஜனநாயகக் கட்சியினர் ஆளும் மாகாணங்கள் மற்றும் நகரங்களை முடக்கும் வகையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயை (28 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) டிரம்ப் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.