world

img

மியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு ஐ.நா.சபை கண்டனம்..... கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை....

நேபிடாவ்:
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுபவர்கள் மீதான ராணுவத்தின் அடக்குமுறைக்கு ஐக்கியநாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி மியான்மரில் ஆங் சான் சூகிதலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து அந்நாட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை  கைப்பற்றியுள்ளது. தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறுநாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களின் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்து வரும் தலைநகர் நேபிடாவ், யாங்கூன், மாண்டலே ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகளில் ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. இணையதளசேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு  20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், ராணுவ அதிகாரிகளுக்கு எதிரான கருத்துக்களை பரப்புபவர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனை, அபராதம்ஆகியவை விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு ராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது.  

இந்த நிலையில் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள்  சபையின் மியான்மர் நாட்டிற்கான சிறப்பு தூதர் கிறிஸ்டின் ஷ்ரானர் புர்கெனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டத்தை ஒடுக்க மியான்மர் ராணுவம் அடக்குமுறைகளை மேற்கொள்வதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும்.  மியான்மரில் நடப்பதைஉலக நாடுகள் கவனித்து வருகின்றன.  போராட்டக்காரர்கள் மீது கடுமையாக நடந்து கொண்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்நிலையில் ஆங் சான் சூகியின் தடுப்புக்காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு ராணுவம் நீட்டித்துள்ளது.