ஆப்கானிஸ்தானை மிகமிக மோசமான நெருக்கடிக்குள் அமெரிக்கா தள்ளியுள்ளது என அந்நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி குற்றம்சாட்டியுள்ளார்.
20ஆண்டு காலம் ஆப்கனில் பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தற்போது அங்கிருந்து வெளியேறி வருகின்றன. ஆகஸ்ட் 31க்குள் முழுமையாக வெளியேறப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கொடிய பயங்கரவாதிகளான தலிபான்களுக்கு வாய்ப்பை உருவாக்குவதாக அமெரிக்காவின் முடிவு அமைந்துவிட்டது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அஷ்ரப் கனி, தலிபான்களுக்கும் அரசுக்கும் இடையே அமைதியை உருவாக்குவதாகக் கூறியே மிக நீண்ட காலத்தை அமெரிக்கா வீணடித்துவிட்டது என்றும் அமெரிக்காவின் இந்த முயற்சி ஆப்கனில் அமைதியை கொண்டுவருவதற்கு தவறிவிட்டது என்பது மட்டுமல்ல, ஆப்கன் மக்களிடையே பெரும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்திவிட்டது என்றும் கூறியுள்ளார்.
தலிபான்களுக்கும் ஆப்கன் அரசுப் படையினருக்கும் இடையே கடும் மோதல் நடந்துவரும் சூழலில், காபூலில் ஆப்கன் நாடாளுமன்றம் அவசரமாக கூடியுள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த ஜனாதிபதி அஷ்ரப் கனிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் ராணுவ அணிவகுப்புடன் மரியாதை அளிக்கப்பட்டது.பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அஷ்ரப் கனி, தலிபான்கள் தற்போது மாகாண தலைநகரங்களைக் குறி வைத்து தாக்குகிறார்கள்; மாகாண தலைநகரங்களை அவர்களிடமிருந்து பாதுகாப்பதுதான் முதல் பணியாக இருக்கிறது என்று கூறினார்.
அடுத்த ஆறு மாத காலம் ஆப்கனில் ஒரு பயங்கரச் சூழல் நிலவும் என்று உணர்வதாகவும், இந்தக் காலத்திற்குள் தலிபான்களை பின்னுக்குத் தள்ளுவோம் என்றும் அவர் பேசினார்.