world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த திட்டம்

 ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 முன் மொழிவுகளைக் கொண்ட வரைவுத்  திட்டத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் வடிவமைத்து வருகின்றன. இதில் ராணுவத்தின் அளவை உக்ரைன் பெருமளவு குறைக்க வேண்டும். போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, ஐரோப்பிய அமைதிப் படைகள் உக்ரைனுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும் குறிப்பாக தனது நிலப்பகுதிகளை ரஷ்யாவிற்கு உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும் என கூறப்படலாம் என தெரிகிறது.    

ஜெர்மன் கார் உற்பத்தித் துறை வேலைவாய்ப்பு கடும் சரிவு

கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜெர்மனி வாகன உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு கடுமையாகச் சரிந்துள்ளது. பொருளாதார மந்தநிலையே இதற்குக் காரணம். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் 48,700 வேலைகள் குறைந்துள்ளன. இது சுமார் 6.3 சதவிகித சரிவாகும். கார் தயாரிக்கும் நிறுவனங்களை விட, கார்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை வழங்கும் நிறுவனங்களே அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.

நியாயமான ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் : குட்டரெஸ்  

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க உலக நாடுகள் உடனடியாக ஒரு நியாயமான ஒப்பந்தத்தை உருவாக்க முன் வர வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு நாம் அடைந்துள்ள முன்னேற்றங்கள் போதுமானதாக இல்லை. நாம் இன்னும் மிக வேகமாகச் செயல்பட வேண்டும். கார்பன் வெளியேற்ற அளவை வெகுவாகக் குறைக்க வேண்டும். 2050 க்குள் நெட்-ஜீரோ என்ற சமநிலையை அடைய வேண்டும் என கூறியுள்ளார்.

காங்கோவில் அதிகரிக்கும் வன்முறை : ஐ.நா கவலை

ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா அவை கவலை தெரிவித்துள்ளது. ஐ.நா மனிதாபிமான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடந்த தாக்குதல்களில் 45-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி நோயாளிகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவப் பணியாளர்கள்  கடத்தப்பட்டு, மருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டு, மருத்துவமனைக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

போர் நிறுத்தம் மீறி தாக்குதல் : காசாவில் 33 பேர் படுகொலை

இஸ்ரேல் ராணுவம் போர் நிறுத்தத்தை மீறி வியாழக்கிழமை அதிகாலை காசாவில்  வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் 33 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலோர் குழந்தைகளாவர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதற்குப் பிறகு ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல்  பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது.  சுமார் 400 முறை போர் நிறுத்த விதியை இஸ்ரேல் மீறியுள்ளதாக அல் ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.