தெற்கு சிரியாவில் தாக்குதலை அதிகரிக்கும் இஸ்ரேல்\
சிரியாவின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் வான் வழித்தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. தெற்கு சிரியாவில் உள்ள ராணுவத் தளங்களை அழிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தலைமையிலான சிரியாவின் இடைக்கால அரசாங்கம் இத்தாக்குதல் சிரியாவின் இறையாண்மையை அப்பட்டமாக மீறும் செயல் என இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளது.
குடியிருப்புக்குள் ராணுவ விமானம் விழுந்து 46 பேர் பலி
சூடான் நாட்டின் ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சுமார் 46 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விமானத்தில் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை அந்நாட்டு ராணுவம் உறுதிப்படுத்தவுமில்லை, மறுக்கவுமில்லை. இதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ரஷ்யா கடும் விமர்சனம்
சிரியா மற்றும் லெபனானில் அதிகரித்துவரும் இஸ்ரேலின் தாக்குதலை ரஷ்யா கண்டித்துள் ளது. மேலும் இத்தகைய நடவடிக்கைகள் கவலை யளிப்பதாக ஐ.நா அவைக்கான ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதியான வாசிலி நெபென்சியா தெரிவித்துள் ளார். மேலும் இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கை பிராந்தியத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் என்றும் கண்டித்தார். சிரியா எல்லையில் இஸ்ரேல் ராணுவம் தயார் நிலையில் உள்ள செயற்கைக்கோள் படங்கள் வெளியான பிறகு இவ்வாறு ரஷ்யா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
பணக்காரர்களை குடிமக்களாக அங்கீகரிக்க திட்டம்
“கோல்டு கார்டு” என்ற புது திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். கிரீன் கார்டில் உள்ள அனைத்து சலுகையும் இதில் இருக்கும் எனவும் இதனை 5 மில்லியன் டாலர்களை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். பணக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு இந்த கார்டை பெற்று வரலாம். வசதியுட னும், வெற்றிகரமாகவும் இருக்கலாம். அவர்கள் நிறைய பணம் செலவு செய்வார்கள், நிறைய வரி கட்டுவார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி உயர்வால் பாதிக்கப்படும் இங்கிலாந்து குடும்பங்கள்
2025 ஏப்ரல் முதல் ஜூன் வரை இங்கிலாந்தில் எரிசக்தி விலை அதிகபட்சமாக 6.4 சதவீதம் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் எரிவாயு மற்றும் மின்சார சந்தைகளின் அலுவலக அறிவிப்பின்படி ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கான எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கான வருடாந்திரச் செலவு, தற்போதுள்ள 1,738 பவுண்டுகளில் இருந்து 1,849 பவுண்டுகளாக உயரும். இது இங்கிலாந்து குடும்பங்களுக்கு நெருக்கடிகளை உருவாக்கும் என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.