திருப்பூர்:
தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு, நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், புதிய கல்விக் கொள்கையைஆதரித்தும் மின்னஞ்சல் அனுப்பும்படி பாஜக வகையறா சமூக ஊட
கங்களில் கொல்லைப்புற வழி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு அமைந்திருக்கும் நிலையில் நீட்தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நீட் தேர்வின் தாக்கம் குறித்து மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவிக்கும்படி அறிவிப்பு செய்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் பலதரப்பினரும் நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர். இதனிடையே ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக வகையறா கொல்லைப்புற வழியாக நீட் தேர்வுக்கு ஆதரவாக மின்னஞ்சல் அனுப்பும் வேலையை செய்து வருகிறது. உள்ளூர் வாட்ஸ் ஆப் குழுக்களில், அநாமதேயமாக, ஆங்கிலத்தில் ஒரு குறிப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதை அப்படியே அவரவர் மின்னஞ்சல் மூலம் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பெற்றோர்கள் அவர்களது சொந்த மதிப்பீட்டின் அடிப்படையில் கருத்துத் தெரிவிப்பதைப் போலகாட்டிக் கொள்வதுடன், நீட் தேர்வுக்கு தமிழகத்தில் ஆதரவு இருப்பதுபோலவும் காட்டிக் கொள்ள ஆர்எஸ்எஸ் வகையறா தங்களுக்குகைவந்த கலையான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்ற பிரச்சனையில் நீட் தேர்வை ஆதரித்து பதிவிட்டு இருப்பதுடன், அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, புதிய கல்விக் கொள்கையும் தமிழகத்திற்கு வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பெற்றோர், சமூக ஊடகங்களில் வாட்ஸ் ஆப் குழுக்களில் இருப்போர் ஆர்எஸ்எஸ் பாஜகவின் இந்த சதிச் செயலுக்கு இரையாக வேண்டாம் என்று இந்திய மாணவர்சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர். அதேசமயம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு நீட் தேர்வு வேண்டாம் என வெளிப்படையாக மின்னஞ்சல் அனுப்பும் இயக்கத்தையும் திருப்பூர் இடுவாயில் வெள்ளியன்று மேற்கொண்டனர்.இடுவாய் ஊராட்சி வாலிபர் சங்கக் கிளைகள் சார்பாக தியாகி இரத்தினசாமி நிலையம் முன்பு நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மின்னஞ்சல் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. வாலிபர் சங்க சீராணம்பாளையம் கிளைச்செயலாளர் ந.கார்த்திக் தலைமைஏற்றார். மாவட்டத் தலைவர் பா.ஞானசேகரன் இந்த இயக்கத்தைத்தொடக்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் த.உமாசங்கர், இடுவாய்ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பிரபு, மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர்கள் கே.ஈஸ்வரன், கே.கருப்புசாமி மற்றும் வாலிபர் சங்கத்தினர் பங்கேற்றனர்.