tamilnadu

img

புதிய கல்விக் கொள்கை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிப்பு.... மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும் : அமைச்சர்....

சென்னை/திருச்சி:
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மாநில கல்வித்துறை செயலா ளர்களுடன் மத்திய அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை தமிழகஅரசு புறக்கணித்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் அமைச்சரும் இருக்கும்நிலையில் துறைச் செயலாளர்களை கொண்டு மட்டும் ஆலோசனை நடத்துவது ஏற்புடையது அல்ல என்று தமிழக அரசு கூறியுள்ளது. 

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, நாடு முழுவதும் அந்தந்த மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களுடன் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் திங்களன்று (மே 17) கலந்தாலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:“மத்திய அரசிடமிருந்து கடந்த2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு இ-மெயில்வந்தது. அதில், இப்போதைய கொரோனா காலத்தில் மாணவர் களுக்குக் கல்வி வழங்குவதை எப்படிக் கையாளலாம், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலை, ஆன்லைன் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது ஆகியன குறித்து, மே 17-ல் நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அந்தந்தத் துறை அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து, முதல்வரின்கவனத்துக்குக் கொண்டு சென்ற போது, அவர், தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்து, பள்ளிக் கல்வித் துறைக்கென மாநில அமைச்சர் உள்ள நிலையில், அதிகாரிகள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறுவது கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணானதாக உள்ள தாகக் கருத்து தெரிவித்தார்.மேலும், இது பள்ளி மாணவர் களின் எதிர்காலம் தொடர்புடைய விவகாரம் என்பதால், மத்திய அரசு நடத்தும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும், அமைச்சரின் கருத்துகளைக் கேட்டு, அதைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, பதில் இ-மெயில்அனுப்பினோம். ஆனால், அந்த இ-மெயிலுக்கு இதுவரை பதில் வரவில்லை.

மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய இந்த விவகாரம், அரசியல் செய்வதற்கான களம் அல்ல. எனவே, மத்திய அரசின் கலந்தாலோசனைக்  கூட்டத்தில் பங்கேற்கவில்லை.மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதாகப் புதிய கல்விக் கொள்கை உள்ளது. இட ஒதுக்கீடு குறித்து அதில் குறிப்பிடப்பட வில்லை. 3, 5, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுத் தேர்வு முறை குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுக் கல்வி என்பது வளர்ந்த நாடுகளில்கூட இல்லை. ஆனால், மத்திய அரசோ மாநிலங்களில் யார் என்ன படிக்க வேண்டும் என்று நாங்கள்தான் முடிவு செய்வோம் என்ற அடிப்படையில், புதிய கல்விக் கொள்கையை வகுத்துள்ளது. புதியகல்விக் கொள்கையால், கிராமப்புறமாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவர். 

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் என்றைக்கும் பின்வாங்காமல், மத்திய அரசுடன் மோதல் போக்கு என்ற வகையில் அல்லாமல், எங்கள் கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள பரிந்துரைகளை ஏற்று, புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வோம். கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதநிலையில், முதல்வருடன் ஆலோசித்து எங்களது கருத்துகளை இ-மெயில் மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும். அதுவரை, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தலா 10 பேராகப் பிரித்து 9, 10, பிளஸ் 1 வகுப்பு ஆசிரியர்கள் மூலம் ஆன்லைன் மூலம் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக துறையின் முதன்மைச்செயலாளருடன் ஆலோசனை நடத்திநல்ல தீர்வு எட்டப்படும். மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியைப் பார்க்கும்போது ஆர்வம் வரும் வகையில், கூடுதல் புத்தாக்கத்துடன் செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.