world

img

ஜெப் பெசோஸை முந்திய மார்க் ஜூக்கர்பெர்க்: உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 2-ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 2-ஆவது இடத்திற்கு மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் முன்னேறியுள்ளார்.

ப்ளும்பெர்க் பில்லியனர்கள் அறிக்கையின்படி, மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உலகின் 2-ஆவது பணக்காரராக முன்னேறியுள்ளார். 2024-ஆம் ஆண்டில் இரண்டாம் காலாண்டில் மெட்டாவின் பங்குகள் எதிர்பார்த்ததை விட 23 சதவிகிதம் உயர்ந்துள்ளன. அவரது நிகர மதிப்பு 206.2 டாலராக உயர்ந்துள்ளது.

இதன்மூலம், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸைவிட 1.1 பில்லியன் டாலர் அதிகம் பெற்று, அவரை பின்னுக்குத் தள்ளி, உலகின் 2-ஆவது பணக்காரராக மார்க் ஜூக்கர்பெர்க் முன்னேறியுள்ளார்.

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் மெட்டாவின் பங்குகள் 70 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு முதலீடுகள்தான், மெட்டாவின் விற்பனை வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்று மெட்டா பலமுறை கூறியுள்ளது.

மார்க் ஜூக்கர்பெர்கை காட்டிலும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 50 பில்லியன் டாலர் முன்னிலையுடன் முதலிடத்தில் உள்ளார்.

உலகின் 2-ஆவது பணக்காரராக முன்னேறியுள்ள மார்க் ஜூக்கர்பெர்கின் மெட்டா நிறுவனம் தான் 2022-ஆம் ஆண்டில் 20 ஆயிரத்தும் மேற்பட்ட பணியாளர்களை பணி நீக்கம் செய்தது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது லாபத்தை பெருக்கிக்கொள்ள ஊதிய வெட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் இல்லாமல், தற்போது ஊழியர்களை பணி நீக்கம் செய்து, பலர் செய்யக்கூடிய வேலைகளை சிலரை வைத்து மட்டும் முடித்துவிட்டு, லாபத்தை பெருக்கிக்கொள்ளும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றன.