world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சிரியா மீது அமெரிக்கா குண்டு வீச்சு  

சிரியாவின் மீது அமெரிக்கா ஜோர்டான் விமானப்படையுடன்  இணைந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. சமீபத்தில் சிரியாவில் நடந்த ஒரு தாக்குதலில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் என 3 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இதற்கு பதிலடி தருவதாகக் கூறி  ஐஎஸ் பயங்கரவாதிகளின் 70-க்கும் மேற்பட்ட நிலைகள் மீது அமெரிக்க ராணுவம் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக் என்ற பெயரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.  

போராட்டத்தை உடைக்க பிரான்ஸ் அரசு முயற்சி

ஐரோப்பாவிற்கும், தென் அமெரிக்க நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மெர்கோசூர் வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் பிரான்சில் லம்பி ஸ்கின் என்ற நோயால் பாதிக்கப்படும் கால்நடைகளை ஒட்டுமொத்தமாகக் கொல்ல அரசு முடிவெடுத்துள்ளது. இது இரண்டும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கடந்த ஒரு வாரமாக பிரான்சில் விவசாயிகள் சாலைகளை மறித்துப் போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தை உடைக்க பிரான்ஸ் அரசு முயற்சித்து வருகிறது.

ஒப்பந்தத்திற்காக கட்டாயப்படுத்த மாட்டோம் - அமெரிக்கா

 உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர, உக்ரைன் மீது எந்தவொரு ஒப்பந்தத்தையும் அமெரிக்கா திணிக்காது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் மியாமி நகரில் துவங்கிய நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். முந்தைய போர் நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைனும் ஐரோப்பிய நாடுகளும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கம்போடியா-தாய்லாந்து மோதல் : பேச்சுவார்த்தை நடத்தும் சீனா

கம்போடியா-தாய்லாந்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்த சீனாவின் ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதர் டெங் சிஜூன் கம்போடியா சென்றுள்ளார்.  இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண சீனா தொடர்ந்து உதவும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் சார்பாக திங்கட்கிழமை (டிச.22) ஒரு சிறப்பு சந்திப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை

 பரிசுப்பொருட்கள் ஊழல் தொடர்பான 2 ஆவது வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவருக்கும் தலா 16.4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் நடைபெற்ற விசாரணையின் போது, ​​சிறப்பு நீதிபதி ஷாருக் அர்ஜுமந்த் இந்தத் தீர்ப்பை வழங்கினார். சட்டத்தின்படி, அபராதத்தைச் செலுத்தத் தவறினால், கூடுதல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.