world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சீன நிதியுதவியுடன் பாலஸ்தீனத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவு 
பாலஸ்தீன மேற்குக் கரை ரமல்லா நகரில், சீன நிதியுதவியுடன் கட்டப்பட்ட சீன-பாலஸ்தீன நட்புறவு சதுக்கம்  (11 கி.மீ.) சாலையை பாலஸ்தீன, சீன அதிகாரிகள் திறந்து வைத்தனர். பாலஸ்தீனத்தின் வளர்ச்சியை வலுப்படுத்த, சீனாவின் நவீனமயமாக்கல் எவ்வாறு உதவுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பாலஸ்தீன பிரதமர் முஸ்தஃபா, பாலஸ்தீன மக்களுக்கும், பல்வேறு துறைகளில் உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை மேம்படுத்துவதற்கும் சீனா ஆதரவளித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். 


மத்திய கிழக்கில் மீண்டும் போரைத் தூண்டும் இஸ்ரேல் 
இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து லெபனான், சிரியாவின் எல்லைகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தி 13 பேரை படுகொலை செய்துள்ளது. இத்தாக்குதலை போர்க் குற்றம் என சிரிய வெளியுறவுத்துறை  அமைச்சகம் கண்டித்ததுடன், மத்திய கிழக்குப் பகுதியில் மீண்டும் ஒரு போரைத் தூண்ட இஸ்ரேல் திட்டமிடுகிறது என குற்றம் சாட்டியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை படுகொலை செய்ததற்கு இஸ்ரேலுக்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் எனவும்   ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்துள்ளது.


டிரம்ப் - மதுரோ தொலைபேசி உரையாடல்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெனிசுலாவில் ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டு வருகிறார். இதற்காக கரீபியன் கடல்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கட்டுப்படுத்துவதாகக் கூறி கடற்படை மூலம் தாக்குதல் நடத்தி போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். மதுரோ அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அவருடன் டிரம்ப் தொலைபேசியில் உரையாடியதாக தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இரு தலைவர்களும் சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


போர் நிறுத்தத்தை தாமதப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம் 
உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் (EU) வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது. அனைவரும் அமைதிக்காக முயற்சிக்கும் வேளையில், ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் போருக்கான திட்டங்களைத் தீட்டி வருகிறது  என்று ஹங்கேரி பிரதமர் விக்டோர் ஒப்ராபன் குற்றம் சாட்டியுள்ளார்.  போரை முடிவுக்கு கொண்டு வர சமீபத்தில் ஒரு வரைவு ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா கவலைக்கிடம்
வங்கதேச முன்னாள் பிரதமரான கலீதா ஜியா உடல்நலக் குறைபாட்டால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவரது வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவர்  மிர்சா ஃபக்ருல் ஆலம்ஜிர் தெரிவித்துள்ளார். 80 வயதான அவர் நுரையீரல் தொற்று அறிகுறிகளுடன் நவம்பர் 23 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.