world

img

எங்கு தடுப்பூசி கிடைத்தாலும் வாங்குங்கள்..... ராணுவத்தை பயன்படுத்தி தற்காலிக மருத்துவமனைகளை அமைத்திடுங்கள்.... இந்தியாவுக்கு அமெ. தலைமை மருத்துவ ஆலோசகர் யோசனை......

வாஷிங்டன்:
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்தவேண்டும் என்றும் ராணுவத்தை பயன்படுத்தி தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் என்றும் இந்தியாவுக்கு வெள்ளை மாளிகை தலைமை மருத்துவ ஆலோசகர் யோசனை தெரிவித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகையின் தலைமைமருத்துவ ஆலோசகரும், உலகின் முன்னணி தொற்றுநோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் அந்தோணி பவுசி கூறியதாவது:

இந்தியாவில் கொரோனா சூழ்நிலை மிகவும் தீவிரமாக இருக்கிறது. அதிகஎண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்படும்போது, மருத்துவமனை படுக்கை கள், ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை நிலவும்போது நிலைமை மோசமாகத்தான் இருக்கும். அதனால்தான், உலக நாடுகள் அனைத்தும் தங்களால் இயன்ற அளவுக்கு இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்று கருதுகிறோம்.கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா உடனடியாகவும், நீண்டகால அடிப்படையிலும் சில காரியங்களை செய்ய வேண்டும். முதலில், தங்களால் முடிந்த அளவுக்கு அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும். இந்தியாவிலேயே 2 தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.அத்துடன், ரஷ்யா, அமெரிக்கா எனஎங்கு தடுப்பூசி கிடைத்தாலும், அவற்றை கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டவுடனே இன்றே பிரச்சனை தீர்ந்து விடாது. ஆனால், இன்றிலிருந்து சில வாரங்கள் கழித்து பிரச்சனை தீரும். 

உடனடி தீர்வு கிடைக்க வேண்டுமானால், இந்தியா ஏற்கனவே செய்த ஒரு நடவடிக்கை இருக்கிறது. இப்போதும் இந்தியாவின் சில பகுதிகளில் அமலில் இருக்கிறது. அதுதான் முழு ஊரடங்கு. முழு ஊரடங்கை நாடுமுழுவதும் அமல்படுத்த வேண்டும்.6 மாதங்களுக்கு அமல்படுத்த வேண்டியது இல்லை. சில வாரங்களுக்காவது அமல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு சீனா இதுபோல் செய்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் செய்துள்ளன. எனவே, இந்தியாவும் அமல்படுத்த வேண்டும். மற்ற நாடுகளின் அனுபவத்தை வைத்து பார்த்தால், இதன்மூலம் தொற்று பரவலை தடுத்துவிட லாம்.கடந்த ஆண்டு சீனா கொரோனா வால் உருக்குலைந்தபோது, தனது ராணுவத்தை பயன்படுத்தி தற்காலிக மருத்துவமனைகளை கட்டியது. அதுபோல், இந்தியாவும் தனதுராணுவத்தை வைத்து போர்க்கால அடிப்படையில் தற்காலிக மருத்துவமனைகளை கட்ட வேண்டும். அதன்மூலம் படுக்கை தட்டுப்பாடு நீங்கும். இந்தியாவுக்கு அமெரிக்கா ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள் போன்றவற்றை வழங்கி வருகிறது. அதுபோல், மற்ற நாடுகளும் இந்தியாவுக்கு உதவ வேண்டும். மருத்துவ பணியாளர்களையும் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.