ஜோகன்னஸ்பர்க்:
2021 நோபல் அமைதி விருதுக்கு,கோவிட் 19 தொற்று நோயிலிருந்து இந்த உலகைப் பாதுகாக்க தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் பணியாற் றிய கியூப மருத்துவர்களை தென்னாப்பிரிக்க அரசு முன்மொழிந்துள் ளது.
இதுதொடர்பான அறிவிப்பைவெளியிட்டு பேசிய தென்னாப் பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, கியூப மக்கள் மற்றும் கியூப அரசாங்கத்தின் தன்னலமற்ற, தியாகப்பூர்வமான உதவிகளுக்கு உரிய அங்கீகாரத்தை இந்த உலகம் அளிக்கவேண்டும் என்று கூறினார்.“உலகின் பல பகுதிகளுக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் வந்து எண்ணற்ற நோயாளிகளை தொற்றுநோயின் பிடியிலிருந்து காப்பாற்றிய, கியூபாவின் மருத்துவப் படையாக அறியப்படுகிற டாக்டர் ஹென்றி ரெவி தொற்றுநோய் தடுப்பு மற்றும் கடும் கொள்ளை நோய்கள் தடுப்பு மருத்துவர்களின் சர்வதேசக் குழுவிற்கு 2021 நோபல் அமைதிவிருது அளித்தால் மிகப்பொருத்த மானதாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்க அமைச்சரவை தனது முன்மொழிவை சமர்ப்பிக்கிறது’’ என ஜனாதிபதி சிரில் தெரிவித்தார்.
கோவிட் 19 காலத்தில், மனிதகுலமே அஞ்சி நடுங்கிய அந்த கொடிய தொற்றுநோய்க்கு எதிராக உலக மக்களை விடுவிக்க உலகின் பல்வேறு நாடுகளுக்கு 3,700க்கும் அதிகமான மருத்துவர்களை கியூபா அனுப்பியது; அந்த மிகச்சிறிய தீவுநாடு, இத்தனை பெரிய எண்ணிக்கையில் மருத்துவர்களை அனுப்பி உயிர்களை காத்ததன் மூலம் மாபெரும் வரலாறு படைத்திருக்கிறது என்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.தென்னாப்பிரிக்காவில் மட்டும் இந்த மருத்துவப்படை 2020 நவம்பர் இறுதி வரை பணியாற்றி, தொற்று நோயின் மரணப்பிடியில் சிக்கிய 38ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகளை வியக்கத்தக்க முறையில் பாதுகாத்து மரணத்திலிருந்து அவர்களை மீட்டது எனத் தெரிவித்த ஜனாதிபதி சிரில் இன்னும் தென்னாப்பிரிக்காவின் பல பகுதிகளில் கியூப மருத்துவப் படை தொடர்ந்து பணியாற்றி வருகிறது எனத் தெரிவித்தார்.மனிதநேயத்தின் மகத்தான பாங்கினையும் சகமனிதருக்கு உதவுவது என்ற அன்பின் ஆதரவுக் கரங்களையும் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் அளித்திருக்கிற மகத்தான கியூப மக்களுக்கு எங்களது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்ட அவர், கியூபாவிற்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான நீண்டநெடிய உறவுகளின் உச்சக்கட்ட பரிணாமமாக இது அமைந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார். நிறவெறிக்கும் காலனிஆதிக்கத்திற்கும் எதிரான ஆப்பிரிக்காவின் மாபெரும் போராட்டத்தில் கியூபாவிற்கு உள்ள பங்கும் பிடல்காஸ்ட்ரோ மற்றும் சே குவேரா ஆகிய மாபெரும் புரட்சியாளர்களின் பங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உள்பட தேவையான அனைத்துப் பொருட்களுடனும் கோவிட் காலத்தில் 217 பேர் கொண்டகியூப மருத்துவப் படை தென்னாப்பிரிக்காவுக்கு வந்தது. இன்னும் அப்படை அங்கு பல்வேறு கிராமப்பகுதிகளில் பணியாற்றி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.