உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அரசு பங்களாவில் இருந்து முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்ய வைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி ஒய்வுபெற்றார். இதை தொடர்ந்து, அதே ஆண்டு டிசம்பரில், குளிர்காலத்தில் தில்லியில் விதிக்கப்பட்ட கட்டுமானத் தடை காரணமாக மாற்று இடத்தை புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, அரசு பங்களாவை காலி செய்வதற்கு அவகாசம் கோரி அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அனுமதி பெற்றார். ஒன்றிய அரசும் மாதத்திற்கு ரூ.5,430 உரிமக் கட்டணம் செலுத்தி 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 வரை அரசு பங்களாவில் வசிக்க அனுமதித்தது. இதே போல் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயிடமும் சந்திரசூட் அரசு பங்களாவில் வசிக்க அனுமதி கோரினார். அதற்கு மே 31 ஆம் தேதி வரை அரசு பங்களாவில் தங்கிக்கொள்ள சிறப்பு அனுமதியை நீதிபதி பி.ஆர்.கவாய் வழங்கினார்.
இந்த நிலையில், காலி செய்வதற்கு வழங்கப்பட்ட அவகாசத்தை தாண்டியும் டி.ஒய்.சந்திரசூட் காலி செய்யாததால், அவரை வெளியேற வைத்து பங்களாவை உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.