ஜெனீவா:
உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக நைஜீரியா நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா (வயது 66) என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், ஏற்றுமதி வரி உள்ளிட்டவற்றை உலக வர்த்தக அமைப்பு கட்டுப்படுத்தி வருகிறது. 164 உறுப்பினர்களை கொண்ட உலக வர்த்தக அமைப்பிற்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் அண்மையில் நடைபெற்றன.இதற்கான போட்டியில் நைஜீரியா நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா மற்றும் தென்கொரிய வர்த்தகத்துறை அமைச்சர் யு மியுங் -ஹீ ஆகியோர் இருந்தனர். இதில் உலகவர்த்தக அமைப்பின் தலைவராக நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக வர்த்தக அமைப்பின்தலைவராக முதல் ஆப்பிரிக்கரும் முதல் பெண்ணும் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா ஆவார்.
கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதாரம் மற்றும் சுகாதார விளைவுகளில் கவனம் செலுத்தி உலகளாவிய பொருளாதாரம் மீண்டும்அதன் வழியில் பயணிப்பதை உறுதி செய்வதே தனது முதன்மைபணி என்றும் உலக வர்த்தக அமைப்பு பலவிதமான சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதேசமயம், அனைவரும் இணைந்து செயல்படுவதன் மூலம் இந்த அமைப்பை வலுப்படுத்தி நடைமுறை உலகின் எதார்த்தத்திற்கு ஏற்ப இந்த அமைப்பை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தெரிவித்துள்ளார்.