உதவிய ஆப்கானியர்களுக்கு அமெரிக்கா துரோகம்
ஆப்கானிஸ்தானின் வளங்களை திருட அந்நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்த போது உதவிய ஆப்கானியர்களை, தற்போது நாடு கடத்த திட்டமிட்டுள்ளது. அமெ. ராணுவத்திற்கு மொழிபெயர்ப்பு, ஓட்டுநர்கள் மற்றும் அரசு ஊழியர்களாக உதவிய 2,50,000 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள், அமெரிக்காவில் குடியேற உதவிய வெளியுறவுத்துறை அலுவலகத்தை டிரம்ப் நிர்வாகம் மூடுவதாகவும், இதனால் அவர்கள் கட்டாயமாக ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் பிரதமர் ராஜினாமா செய்ய முடிவு
ஜப்பான் பிரதமர் இஷிபாவின் கூட்டணி மேலவை தேர்தலில் பெரும்பான்மை பெறவில்லை. எனினும் அமெரிக்காவுடன் நடந்து வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை கையாள அவர் பதவியில் நீடிப்பார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தனது ராஜினாமாவை முறையாக அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 248 இடங்களில் 122 இடங்களில் மட்டுமே அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
பட்டினியை வெடிகுண்டாக பயன்படுத்தும் இஸ்ரேல்
பாலஸ்தீனர்களுக்கான உணவை தடுப்பதன் மூலமாக இஸ்ரேல் பட்டினியை வெடிகுண்டாகப் பயன்படுத்தி வருகிறது. இதனால் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு பலியாகும் பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 80 குழந்தைகள் உட்பட 101 பேர் பட்டினிக்குப் பலியாகியுள்ளனர். மேலும் நிவாரண முகாம்களில் உணவு வாங்கச் சென்ற 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா வெளியேறியது
யுனெஸ்கோ அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. டிரம்ப் முதல் முறையாக ஜனாதிபதியான போது 2018 இல் இந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜோ பைடன் ஆட்சியின் போது இந்த அமைப்பில் மீண்டும் அமெரிக்கா இணைந்தது. தற்போது மீண்டும் விலகியுள்ளது. இந்த அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக உள்ளது எனவும் அதனால் வெளியேறுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் மீது நடவடிக்கை
கடந்த ஆண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கொலம்பியா பல்கலைக்கழகத்துக்குள் முகாம் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் வரை சுமார் 80 பேர் வரை இடைநீக்கம் மற்றும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாகவோ கூறப்படுகிறது. டிரம்ப்பின் மிரட்டல்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருகலாம் என கூறப்படுகிறது.
கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான நாடுகளுக்கு இடையே புதிய அத்தியாயம்
சீனா - வியட்நாம் கூட்டு ராணுவப் பயிற்சி
ஹனோய், பெய்ஜிங், ஜூலை 23- சீனா - வியட்நாம் நாடுகளின் ராணுவம் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக சீன ராணுவ அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இரு நாடுகளும் முதல் முறையாக இந்த கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்தவுள்ளன. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, மேலும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இது ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைக்கும் என பாராட்டப்படுகிறது. இரு நாடுகளும் நீண்டகாலமாகவே நிலம் மற்றும் கடல் எல்லைப்பகுதியில் கூட்டாக ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கூட்டு ராணுவப் பயிற்சி என்பது இதுவே முதல் முறையாகும். சீன ராணுவ அமைச்சக அறிக்கையின் படி, இந்த கூட்டு ராணுவப் பயிற்சியானது வியட்நாமுடனான சீனாவின் எல்லை பகுதியான குவாங்சி ஜுவாங் என்ற தன்னாட்சிப் பகுதியில் இம்மாதம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே தென் சீன கடல் பகுதியில் உரிமை உள்ளிட்ட எல்லை தொடர்பான பிரச்சனைகள் இருக்கும் போதிலும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அண்மைக்காலமாக சில நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் வர்த்தகப் போர் துவங்கிய பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. வியட்நாமின் உற்பத்தித் துறைக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் ஒரு முக்கிய நாடாக பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா உள்ளது. அமெரிக்காவின் வர்த்தகப் போர் தீவிரமடைந்த சில நாட்களுக்குப் பிறகு, “அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட” ஆசியாவில் உள்ள சீனாவின் அண்டை நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடந்த ஏப்ரல் மாதம் வியட்நாமிற்கு அரசுமுறை பயணம் சென்றார். அப்போது நடத்தப்பட்ட ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜிய உறவின் 75 ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக ஏப்ரல் 30 அன்று வட வியட்நாம், தென் வியட்நாம் ஒன்றிணைந்த 50 ஆம் ஆண்டு நிறைவு தின கொண்டாட்டத்தின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் சீனாவின் ராணுவமும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.