world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சூடானில் 33 லட்சம் குழந்தைகள்  ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு 

சூடானில் உள்நாட்டுப் போரின் காரணமாக சுமார் 33 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா குழந்தைகள் நிதியம் அறிவித்துள்ளது. 2.46 கோடி மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். இதில் 85 லட்சம் பேர் மோசமான பஞ்சத்தில் உள்ளனர். 1.7 கோடி குழந்தைகள் இரண்டு ஆண்டுகளாக பள்ளிக் கல்வியை இழந்துள்ளனர். இதில் சுமார் 50 லட்சம் பேர் இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர் என ஐ.நா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஆபத்தின் பிடியில்   உலக உணவுத் திட்டம் 

நிதி பற்றாக்குறை காரணமாக, உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மியான்மரில் 10 லட்சம் மக்களுக்கான உணவு திட்டத்தை வெட்ட வேண்டிய கட்டாயத்தில் உலக உணவுத் திட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 இல் அமெரிக்கா தனது 4.4 பில்லியன் டாலர்களை ஐ.நாவின் உலக உணவுத் திட்டத்திற்கு வழங்கியது. ஆனால் டிரம்ப்பின் நிர்வாகம், ஐ.நா உட்பட பல அமைப்புகளுக்கான நிதிகளை வெட்டியது. இதனால் இந்த நெருக்கடி உருவாகியுள்ளது.

காசாவில் இஸ்ரேல் திட்டமிட்டு  இனப்படுகொலை செய்தது : ஐ.நா.

இனப்பெருக்க, சுகாதார வசதிகளை குறிவைத்து அழித்ததன் மூலம் காசா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலைகளை திட்டமிட்டு நடத்தியது என ஐ.நா அவையின் விசார ணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கை யில் பாலஸ்தீனர்களின் இனப்பெருக்கத் திறனை அழிக்க இஸ்ரேல் அதிகாரிகள் வேண்டுமென்றே செய்த நடவடிக்கைகளை ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அவர்களை பஞ்சத்தில் தள்ளி இனப்படுகொலை செய்ய  வேண்டுமென்றே அத்தியாவசியப் பொருட்களை நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போப் உடல் நிலையில் தொடர் முன்னேற்றம்

போப் பிரான்சிஸ் உடல் நிலையில் தொடர் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என வாட்டிகன் செய்தி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 14 அன்று உடல்நிலை குறைபாட்டின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுவரை எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின்படி, போப்பின் உடல்நிலை நிலையானதாகவே உள்ளது. வாய் வழியாக செயற்கை முறை ஆக்ஸிஜன் வழங்கல் சிகிச்சையும் தொடர்கிறது என்றும் மருத்துவச் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சட்டவிரோத தடைகளை நிறுத்த வலியுறுத்தி கூட்டறிக்கை

சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து மார்ச் 14 அன்று ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. அதில் ஈரான் நாட்டுக்கு எதிராக அமெரிக்காவின் “சட்டவிரோதமான” தடைகளை நிறுத்த அவை வலியுறுத்தியுள்ளன. ஈரானின் அணுசக்தி வளர்ச்சி தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. மேலும் எந்த முரண்பாடுகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அவை வலியுறுத்தியுள்ளன. 

போர் நிறுத்தத்திற்கு உடன்படுகின்றோம்; ஆனால் அது நீண்ட காலத்திற்குரியதாக இருக்க வேண்டும் : புடின்

ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனினும் போர் நிறுத்தம் நீண்ட காலத்திற்குரிய தாக இருக்க வேண்டும் எனவும் அதனுடன் மேலும் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் குறித்து பேசுவதற்காக உக்ரைன் அதிகாரிகளுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிவில் 30 நாட்களுக்கு போரை இடைநிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இம்முடிவு ரஷ்யாவிற்கும் அனுப்பி வைக்கப் பட்டது. ரஷ்யா போர் நிறுத்த முன்மொழிவை வரவேற்பதாகவும் ஆனால் அது நீண்ட காலத்திற்குரியதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர், போர் நிறுத்தத்தை ஏற்கிறேன் அல்லது மறுக்கின்றேன் என வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

மேலும் வெறும் 30 நாட்கள் போர் நிறுத்தம் அமலானால் மேற்கு நாடுகளின் உதவி மூலமாக உக்ரைன் தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனுடன் உக்ரைனுக்கு நேட்டோ அந்தஸ்து வழங்கக் கூடாது. உக்ரைனில் நேட்டோ, அமைதிப்படை என எந்த வெளிநாட்டு ராணுவமும் நிலைநிறுத்தக் கூடாது. கிரீமியா மற்றும் 2022 போருக்குப் பிறகு ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைனின் டான்பாஸ் உள்ளிட்ட   நான்கு பகுதிகள் ரஷ்யாவிற்கு சொந்தமானவை என சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை ரஷ்யா முன்வைத்துள்ளது.  மேலும் போர் நிறுத்தத்தை கண்காணிப்பது யார்? ஒப்பந்தம் மீறப்பட்டால் என்ன செய்வது? என சில முக்கிய கேள்விகளை ரஷ்யா எழுப்பி யுள்ளது. இது குறித்து  டிரம்ப் உடன் தொலை பேசி  உரையாடல் நடத்த உள்ளதாக புடின் தெரிவித் தார். இந்நிலையில் புடின் போர் நிறுத்தத்தை மறுப்பதற்கு முயற்சி செய்கின்றார் என ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இத னை வெளிப்படையாக அமெரிக்காவிடம் சொல்ல  புடின் பயப்படுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.