ரஷ்யா செல்லும் அமெரிக்க அதிகாரிகள்
உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அதிகாரிகள், தூதர்கள் ரஷ்யா சென்றுள்ளனர். உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் அந்தஸ்து வழங்கக் கூடாது, வெளிநாட்டு ராணுவத்தை உக்ரைனில் நிலை நிறுத்தக் கூடாது, ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள டான்போஸ், கிரீமியா உள்ளிட்ட நான்கு பகுதிகள் ரஷ்யாவின் பகுதிகள் என உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளை ரஷ்யா முன் வைப்பதாகக் கூறப்படுகின்றது.
ஈரான் மதத்தலைவர் கோமேனி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஈரான் மத தலைவர் அலி கோமேனி நிராகரித்துள்ளார். அமெரிக்கா ராணுவ பலத்தை காட்டி அச்சு றுத்துகிறது. இதற்கு ஈரான் தக்க பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அணு சக்தி தொடர்பாக டிரம்பின் கடிதத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரி அன்வர் கர்காஷ் மூலம் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி பெற்றதாகக் கூறப்பட்ட நிலையில் இக்கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
40 ஆண்டுகள் இல்லாத வகையில் நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்
நேபாளத்தில் 40 ஆண்டுகள் இல்லாத வகையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபில்ஸ் நகரத்தில் அதிகாலை 1.25 மணியளவில் 3 கிலோமீட்டர் ஆழத்தில் 4. 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் வாகனங்களும் மக்களும் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணியை தேசிய பேரிடர் மீட்புப்படை மூலம் அந்நாட்டு அரசு துரிதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா பிரதமராக கார்னி இன்று பதவியேற்கிறார்
கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி வெள்ளியன்று பதவி ஏற்கின்றார். கனடாவின் லிபரல் கட்சியின் தலைமையிலான ஆட்சியில் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ மீது உட்கட்சியில் அதிருப்தி அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர் ஜனவரி 7 அன்று பதவி விலகினார். அவரே அக்கட்சியின் தலைவ ராகவும் இருந்த நிலையில் அக்கட்சியின் தலைமை பதவிக்கும் பிரதமர் பதவிக்கும் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதில் கனடா மத்திய வங்கியின் தலைவராக பணியாற்றிய மார்க் கார்னி வெற்றி பெற்றார்.
திதாக 25 சதவீத காடு பரப்பளவை அதிகரித்த சீனா
2024 இல் சீனா 4.45 மில்லியன் ஹெக்டேர் மரங்களை நட்டு, அந்நாட்டின் காடுகளின் பரப்பளவை 25 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. ஒட்டு மொத்தமாக 773 மில்லியன் ஹெக்டேர்களுக்கு மேல் காடுகளை வளர்த்து, உலகளவில் மிகப்பெரிய அளவில் காடுகளை அதிகரித்த நாடாக சீனா மாறியுள்ளது. இந்த முயற்சிகள் சீனாவின் காடுகளின் பரப்பையும் மேம்படுத்தி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாட்டின் தலைமையை நிரூபிக்கிறது என பாராட்டப்படுகின்றது.
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்து வர விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவை அனுப்ப நாசா முடிவு செய்திருந்த நிலையில் அந்த பயணம் மீண்டும் தாமதமாகியுள்ளது. 2024 ஜூன் 5 அன்று விண்வெளி வீரரர்கள் இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண் ண்வெளிக்குச் சென்றனர். 8 நாட்களில் அவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கியபோது விண்கலத்தின் ஐந்து உந்துவிசை அமைப்புகள் செயலிழந்தன. அதிலிருந்த ஹீலியமும் தீர்ந்து போனது.
இவ்வாறு ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனைகளால் அவர்களது பூமி பயணம் தடைபட்டது. இதனால் அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாகத் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் நாசாவின் தொடர் முயற்சிகள் தோல்வியடைந்து வந்த நிலையில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைத்து புதிய திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு குழுவை மார்ச் 13 அன்று அனுப்புவதற்கான முயற்சி நடைபெற்றது.
அதன்படி க்ரூ-10 குழுவைச் சேர்ந்த தளபதி ஆனி மெக்லைன், விமானி நிக்கோல் ஆயெர்ஸ், ஜப்பானிய விண்வெளி வீரர் டகுயா ஒனிஷா, ரஷ்ய விண்வெளி ஆய்வாளர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் இடம் பெற்ற ராக்கெட், ஏவுதளத்தில் ஏவுவதற்கு தயார் நிலையில் இருந்த போது ஏவுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக பயணம் ரத்தாகியுள்ளது. ராக்கெட்டை ஏவ உதவும் இரண்டு பக்க ஹைட்ராலிக் கரங்களின் (clamp arms) செயல்பாடு இயல்பாக இல்லை. இந்தக் கரங்கள் சரியான நேரத்தில் ராக்கெட்டை விண்ணில் ஏவும் வகையில் ராக்கெட்டை விடுவிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பதால் இந்த முயற்சி கைவிடப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது சிறிய பிரச்சனைதான் எனவும் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு உடனடியாகச் சரி செய்யப்பட்டு விட்டால் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 14) நாசாவும் ஸ்பேஸ் எக்ஸும் இந்த குழுவை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பும் எனவும் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது. அவ்வாறு பயணம் துவங்கினால் மார்ச் 19 அல்லது 20 அன்று விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்பலாம் என்று கூறப்படுகின்றது.