ஹோலிப் பண்டிகைக்காக மசூதியை தார்ப்பாய் கொண்டு மூடுவதா?
பாஜக அரசுக்கு ஜி. ராமகிருஷ்ணன் கண்டனம்
நாகப்பட்டினம், மார்ச் 14- மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் சிபிஐ எம் மாவட்டக் குழு அலுவலகத்தில் செங்கொடி ஏற்றி வைத்து, மார்க்ஸ் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திய பின்பு, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது: இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் 30 பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தி இருப்பதற்கு இதுவரை பிரதமர் மோடி வாய்திறந்து கண்டனம் தெரிவிக்கவில்லை. வருகின்ற 22 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, கேரளா மாநில முதல்வர் பினராய் விஜயன் பங்கேற்பார்.
மும்மொழி கொள்கையை ஏற்காததால் தமிழகத்தின் கல்விக்கான தொகை ரூ.2,152 கோடியை மத்திய அரசு கொடுக்காதது சர்வாதிகாரப் போக்கு. இந்த நடவடிக்கை மாநில அரசின் உரிமைகள், கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணானது. திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் உருவாவதற்கு முன்னதாகவே அப்போதைய முதல்வர், இந்தி திணிப்பை புகுத்தியபோதே 1937 ஆம் ஆண்டு எதிர்த்தவர் தந்தை பெரியார். எனவே, பெரியாரை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசுவது சரியானதல்ல. இந்தியாவில் ரம்ஜான் பண்டிகையும், ஹோலி பண்டிகையும் பல வருடங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகைக்காக மசூதிகளை தார்பாலின் கொண்டு மூடுவது கண்டிக்கத்தக்கது. பாஜக தலைவர் அண்ணாமலை கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய ஜி.ராமகிருஷ்ணன், காமராஜ், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்தவர்கள். இப்போது, மு.க. ஸ்டாலின் எதிர்க்கிறார். ஆனால், திமுக அரசு மட்டும் எதிர்ப்பது போல பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார். இது சரியல்ல. தமிழ்நாடு என்று பெயர் வருவதற்காக ஒருவர் உயிரிழந்திருக்கிறார் என்ற வரலாறு எல்லாம் சீமானுக்கு தெரியுமா? தமிழ்நாடு என்று பெயர் மாற்றத்திற்கு தியாகி சங்கரலிங்கனார் உயிர் நீத்தது. ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி தான் சங்கரலிங்கனார் உடலை நல்லடக்கம் செய்தது.
நாடாளுமன்றத்தில் பி. இராமமூர்த்தி, தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்மொழிந்தது, பின்னாளில் மேற்குவங்க மாநில நாடாளுமன்ற உறுப்பினர் பூபேஸ் குப்தா அவையில் பேசியது, அதை வழி மொழிந்து அப்போதைய மாநிலங்களவை உறுப்பினரான அறிஞர் அண்ணா பேசியது, இவையெல்லாம் சீமான் அறிந்தித்திருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியினரின் வரலாறு தெரியாமல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குண்டக்கமண்டக்க பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் என, ஜி.ராமகிருஷ்ணன் சீமான் குறித்த கேள்விக்கு பதிலடி தந்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் சிபிஐஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வடிவேல் மயிலாடுதுறை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி. துரைராஜ், நாகை நகரச் செயலாளர் க. வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.