tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் பணி: இருபாலரும் பதிவை சரிபார்த்துக் கொள்ள அழைப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருச்சி மண்டலம், அரியலூர் கிளையில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடத்துக்கு ஆண், பெண் இருபாலரும் சேர்க்கப்பட உள்ளனர். எனவே, அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம் வைத்துள்ள நபர்கள் ஏப்.11 ஆம் தேதிக்குள் அலுவலக வேலை நாள்களில் உரிமம், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் இதர கல்விச்சான்றுகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவினை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அருந்ததியர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும், முன்னாள் படை வீரர்கள் 53 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

நிப்டெம் நிறுவனத்தில் பெண்களுக்கான 
தொழில் முனைவோர் கருத்தரங்கு

தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை (நிப்டெம்) நிறுவனக் கூட்டரங்கில், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு அபெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தொழிலி 5.0 என்ற தலைப்பில் பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், பயிற்சி முகாமினை துவக்கி வைத்து பேசியதாவது: பெண்கள் தொழில் முனைவோராக உருவாகிட, தகுந்த அனுபவங்களை வெற்றியாளர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கும் தொழில் மற்றும் உற்பத்தியிலும் விற்பனை செய்வதற்கான உத்திகளை பயிற்சியின் மூலமாக பெற்று, சிறந்த தொழில் முனைவோராக உயர வேண்டும்.சிறிய முதலீடாக இருந்தாலும், கடின உழைப்பின் மூலமாகவும், தரமான பொருளை விற்பனை செய்வதன் மூலமாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு தொடர்பாளர்களை ஏற்படுத்திக் கொள்ள ஆர்வமுடையவர்களாக விளங்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்கள் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது. அதுபோல், இப்பயிற்சி வகுப்பிற்கு வருகை தந்துள்ள நீங்கள் அனைவரும் சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்” என்றார்.  பின்னர் நிப்டெம் நிறுவனத்தின் கருவிகள், உணவு உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.  இந்நிகழ்ச்சியில், நிப்டெம் நிறுவன இயக்குநர் வி.பழனிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் ரவுடி  கொலை வழக்கில் 7 பேர் கைது

தஞ்சாவூர் அருகே, ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 7 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் அருகே, ஏழுப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பி.குறுந்தையன் (50). காவல் துறையின் ரவுடி பட்டியலில் இடம்பெற்றிருந்த இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருந்தன. இந்நிலையில், இவர் அப்பகுதியில் மார்ச் 11 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, வல்லம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், 2013 ஆம் ஆண்டில் தேர்தல் பிரச்னை காரணமாக ஏழுப்பட்டியைச் சேர்ந்த உலகநாதனையும், 2014 ஆம் ஆண்டில் பர்மா காலனியைச் சேர்ந்த உதயாவையும், குறுந்தையன் கொலை செய்தார். இதற்கு பழி வாங்கும் விதமாக குறுந்தையன் கொலை செய்யப்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய ஏழுப்பட்டியைச் சேர்ந்த ஒத்தகை ராஜா என்கிற ராஜா (33), உலகநாதனின் அண்ணன் எம்.முத்துமாறன் (46), மாப்பிள்ளைநாயக்கன்பட்டி கோபால் என்கிற தினேஷ்குமார் (25), தூத்துக்குடியைச் சேர்ந்த கார்த்தி (25), பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (33), கந்தர்வகோட்டை அருகே மஞ்சப்பேட்டையைச் சேர்ந்த வீரமணி (26), கிள்ளுக்கோட்டை அந்தோணி வில்சன் (25) ஆகிய 7 பேரையும் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

- பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள ஊராட்சி கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியில் 40 ஆண்டுகளைக் கடந்த மண்ணியாற்றுப் பாலம் பழுதடைந்து, எந்த நேரத்திலும் இடியும் நிலையில் உள்ளது. இதேபோன்று புத்தூரிலுள்ள மண்ணியாற்றுப் பாலமும் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது. எனவே இந்த பாலத்தை இடித்து விட்டு புதிதாகவும், தரமாகவும் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.