காபூல்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா தனது ராணுவத்தை வாபஸ் பெற்ற நாளில் இருந்து இன்று வரை தலிபான்களின் ஆதிக்கம் தலைதூக்கி வருகிறது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் மிக முக்கிய நகரங்களுள் ஒன்றான கந்தஹாரை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிகழ்வை தாலிபன்கள் முக்கிய வெற்றியாக கொண்டாடி வருகிறார்கள். காரணம் ஆப்கன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹார் தாலிபன்களின் பிறப்பிடம் என்பது தான். இதனால் தலிபான்கள் கந்தஹார் நகரில் கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக ஆப்கானிஸ்தான் அரசுக்கு இது பெரும் வீழ்ச்சியாகும். காரணம் ஒரே வாரத்தில் கஜினி, ஹேரத், கந்தஹார் ஆகிய நகரங்களை இழந்துள்ளது அரசு படை. தாலிபன்கள் இதே வேகத்தில் தாக்குதல் நடத்தினால் கூடிய விரைவில் நாட்டின் தலைநகர் காபூலையும் கைப்பற்றக் கூடும் என்ற அச்சமும் இதனால் எழுந்துள்ளது.