world

img

பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலை உடனே நிறுத்துக! இந்திய நாட்டிலிருந்து போர்க் கருவிகளை அனுப்பாதே!

ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் தங்களது இராணுவ சந்தையை விரிவுபடுத்தும் அற்ப நோக்கத்திற்காக இஸ்ரேலைத் தூண்டி பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் கொடுமையான போரை ஊக்கு வித்து வருகின்றன என்று சாடினார் மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி.  “இதில் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் எதேச்சதிகாரம் அம்பலப்பட்டு நிற்பதையும் கவனிக்க வேண்டும்; அவதியுறும் பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க முன்வந்த ஐ நா அமைப்பும் இப்போது இஸ்ரேல் படைகள் முட்டுக்கட்டை போடுவதாக சாக்கு சொல்லிப் பின் வாங்கி இருக்கின்றது; இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்; நமது  ஒன்றிய அரசு போர்க்கருவிகள் விற்பது,  ஏற்றுமதி செய்வது உடனே தடுத்து நிறுத்தப் பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார் அவர்.

சனிக்கிழமை (ஜூன் 1) அன்று நடைபெற்ற மத்திய சென்னை மாவட்ட ‘மார்க்சிஸ்ட்’ படிப்பு வட்டத் தொடக்க நிகழ்வில் நிறைவுரை யாற்றிய அவர், இஸ்ரேல் கடைப்பிடிக்கும் யூத இனவெறிக் கொள்கை என்ன, எப்போது அது வேரூன்றியது என்பதையும் வரலாற்று ரீதியில் கண்டுணர வேண்டும்; நாஜி ஹிட்லரின் ஜெர்மனியில் எண்ணற்ற யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்ன ணியில் தப்பியோர் பரிதவிப்போடு தங்களுக்கான வாழ்விடம் தேடுகையில், மக்களில்லா நிலத்தை, நிலமற்ற மக்க ளுக்கு வழங்கவேண்டும் என்ற அடிப்படை யில் கேட்டுக் கொண்டனர். ஆனால் பாலஸ்தீ னர்கள் வசித்துவந்த மேற்குக்கரையை அவர்கள் வந்தடைந்த வரலாறு, ஏகாதி பத்திய நாடுகளின் சுயநல நோக்கில் நிகழ்ந்தது, மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் மூட்டி வளர்க்கப்பட்ட பகைமை நெருப்பு ஒரு குறிப்பிட்ட இனத்தை ஒட்டுமொத்தமாகத் துடைத்தழிக்கும் அளவு கொடிய உருவம் எடுத்து நிற்கிறது என்றார். 

இந்தப் போர் உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தைச் சுட்டிக் காட்டிய வாசுகி, நிவாரண முகாம்களிலும் பாலஸ்தீன மக்கள் படும் அவலங்கள் களை யப்படவேண்டும், குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் பேறு காலத்தைக் கணக்கில் கொண்டு சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும், மேற்கொண்டு உயிரி ழப்பு ஏற்படா வண்ணம் அவசர கால  அடிப்படையில் உணவு, உடை, உயிர் காக்கும் மருத்துவ வசதிகள் அனைத்தும் உறுதி செய்யப்படவேண்டும் என்பன வற்றையும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு வலியுறுத்தியுள்ளது என்றார். 

யூத இனவெறிக் கொள்கையில் ஊறிய  இஸ்ரேல் அரசும், இந்துத்துவ கொள்கை யை வெறியோடு கடைப்பிடிக்கும் மோடி அரசும் மத உணர்வுகளைப் பயன்படுத்தி மக்களை ஆட்டிப்படைக்கின்றன என்பதை ஒப்பிட்ட உ.வாசுகி, இங்கே அனைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகள், சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு எப்படி நியாயப்படுத்த முனைகிறது, அதன் அபாயம் என்னென்ன என்பதையும் கவனத்திற்குக் கொணர்ந்தார்.

ஆங்கில மார்க்சிஸ்ட் ஏட்டில் வந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகள் மீது தமிழில் கருத்துரைகள், கலந்துரையாடல் இவற்றுக்கு வழிவகை செய்யும் மார்க்சிஸ்ட் படிப்பு வட்டம் ஏற்படுத்தப்பட்டு இருப்பது போற்றத் தக்க முன்னுதாரணம் என்றும் அவர் பாராட்டினார். 

அறிஞர் ஜான் செரியனின் பார்வையில்...

முன்னதாக, பாலஸ்தீனம் தொடர்பாக அண்மையில் வெளியாகியுள்ள ஆங்கில மார்க்சிஸ்ட் காலாண்டிதழ் கட்டுரை களை அறிமுகப்படுத்தி மூன்று கருத்துரை யாளர்கள் உரையாற்றினர்.  காசாவில் நடப்ப தென்ன என்று வரலாற்றுப் பின்னணி யோடு விளக்கும் ஜான் செரியன் கட்டுரை யை முன் வைத்துப் பேசிய பேரா. அருண் கண்ணன், இன்று ஒரேயடியாக இனப்படுகொலைக்கு உள்ளாகிவரும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இந்தப் பகைமையின் நெடிய வரலாறு, யூதர் களுக்கான தனி நாடு என்ற இஸ்ரேலின் கொள்கை காலப்போக்கில் பெற்ற அபாய கரமான உருமாற்றம், இதில் மேற்கத்திய நாடுகளின் பாத்திரம் மற்றும் தலையீடு, ஐநாவின் தலையீடு ஆகியவற்றை எடுத்துரைத்தார். 

ஜான் செரியன் கட்டுரை சுட்டிக்காட்டும் பதினோராம் நூற்றாண்டு தொடங்கிய சிலுவைப் போர்கள் முதற்கொண்டு இன்றைய தாக்குதல் வரை விவரித்த இந்திய வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகி என். ராஜகோபால், ஏகாதிபத்திய நாடுகள் பாலஸ்தீன நிலப்பரப்பின் புவி அரசியல் தழுவிய தங்களது சுய நல நோக்கில் இஸ்ரேலைத் தூண்டியும், அவர்களுக்கு உதவிகள் வழங்கியும் செய்துவரும் தலையீடுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

வெடித்தெழும் போராட்டங்கள்

இஸ்ரேல் தாக்குதல்களுக்கு எதிராக வலுத்துவரும் கண்டன இயக்கங்களை ஒடுக்கப் பார்க்கும் ஏகாதிபத்திய முயற்சி களை விவரிக்கும் சயந்தனி முகர்ஜி மற்றும் ஷதம் ரே ஆகிய இருவரது கட்டுரையை முன் வைத்துப் பேசிய மாணவர் சங்க மத்திய சென்னை நிர்வாகி சாருவர்த்தனா,  போர்க்கருவிகளை உற்பத்தி செய்து இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்து இந்தப் போருக்கு முக்கிய காரணமாக விளங்கும் முதலாளித்துவ நாடுகளைக் கண்டித்தும், இஸ்ரேலின் அராஜக தாக்குதல்களுக்கு எதிராகவும், பாதிப்புற்றுத் தத்தளிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரி வித்தும் அமெரிக்க பல்கலைக்கழகங் களில் வெடித்து எழுந்துள்ள மாணவர் களது எழுச்சி மிகு போராட்டங்கள், தொழிற் சங்கங்களின் கண்டன இயக்கங்கள், போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரும் தீர்மானங்கள் ஆகியவற்றை விவரித்தார். எந்த சமூகப் பொறுப்பும் அற்ற ஏகாதிபத்திய ஊடகங்கள் இவற்றை எப்படி திட்டமிட்டுத் திரை போட்டு மறைக்கின்றன, அதையும் மீறி சமூக ஊடகங்களில் எப்படி போராட்ட இயக்கச் செய்திகள் வேகமாகப் பரவி நம்பிக்கை ஊட்டுகின்றன என்பதையும் விளக்கினார்.

பாலஸ்தீன பெண் இயக்குநர் ஃபர்ரா நபுல்சி இயக்கத்தில் 2020இல் வெளி யான ‘தி பிரெசென்ட்’ (நிகழ்காலம்) எனும் குறும்படத் திரையிடலோடு தொடங்கிய மார்க்சிஸ்ட் படிப்பு வட்ட முதல் நிகழ்வுக்குத் தலைமையேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, ஆங்கிலத்தில் வெளிவரும் முக்கிய கட்டுரைகள், நூல் களை தமிழ் வாசகர்களுக்கு எளிய முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் படிப்பு வட்டம் இயங்கும் என்று தெரிவித்தார். நிகழ்வை மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.ஆனந்த் ஒருங்கிணைத்தார். பரிசல் வெளியீடாக மறு ஆக்கம் செய்யப்பட்டு வந்துள்ள சோவியத் புரட்சி வீராங்கனை நா.க.குரூப்ஸ்கயா அவர்களது ‘இளை ஞர்களைக் கம்யூனிச முறையில் பயிற்றி வளர்த்தல்’ எனும் புத்தகத்தை  உ.வாசுகி வெளியிட, மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் மிருதுளாவும், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பார்த்திபனும் பெற்றுக் கொண்டனர். நிறைவாக, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. முருகன் நன்றி நவின்றார். 

தொகுப்பு: சாருவர்த்தனா ர.சி
 

v