காசா மக்கள் ஹமாசை ஆதரிப்பதால் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனவும் அவர்களை கொல்வதில் தவறு இல்லை எனவும் சில இஸ்ரேலிய தலைவர்கள் கூறுகின்றனரே?
இது மிகவும் கண்டிக்கத்தக்க அணுகுமுறை. ஒரு இஸ்ரேலிய அமைச்சர் காசா மக்களை “மனித மிருகங்கள்” என அழைத்துள்ளார். காசா மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது என்பது ஐ.நா.சபை விதிகளுக்கும் பொதுவான மனித நீதிக்கும் முற்றிலும் எதிரானது. ஆனால் இன்றைய தீவிர வலதுசாரி இஸ்ரேல் ஆட்சியாளர்கள் இந்த விதிகளையோ அல்லது மனித தன்மையையோ மதிக்க தயாராக இல்லை. இஸ்ரேல் நிர்வாகம் முழுவதுமே ஒரு பயங்கரவாத அமைப்பு போல வெறியுடன் செயல்படுவதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது உண்மையே!
மேலும் அனைத்து காசா மக்களும் ஹமாசை ஆதரிப்பதாக சொல்ல முடியாது. இப்பொழுது உள்ள காசா மக்களில் 50% பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். அவர்கள் 2006ம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்கவில்லை. அவர்களையும் ஹமாஸ் ஆதரவாளர்கள் என சில இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள் வகைப்படுத்துவது அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் மூர்க்கத்தனமான தாக்குதலை நியாயப்படுத்தும் ஏகாதிபத்திய அணுகுமுறைதான்! காசா பகுதியில் கடந்த பல வருடங்களாக நடந்த இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக 23 லட்சம் பேரில் 17 லட்சம் பேர் ஏற்கெனவே அகதிகள் முகாம்களில்தான் வாழ்கின்றனர்:
ஒரு குறிப்பிட்ட அமைப்பு செய்யும் தவறுக்கு அந்த அமைப்பு சார்ந்த இன மக்கள் அனைவருக்கும் “கூட்டு தண்டனை” தருவது என்பது மனித விரோத செயல் ஆகும். இத்தகைய மிருகத்தனமான அணுகுமுறை மூலம் இஸ்ரேல் காசா பகுதியில் கடந்த சில நாட்களாக நடத்திய தாக்குதல்களில் 13.10.2023 வரை:
800 குழந்தைகள் உட்பட 3000 பேர் உயிரிழப்பு; 1000 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்; 23,000 வீடுகள்; 90 கல்லூரிகள்; 11 மசூதிகள்; 7 தேவாலயங்கள்; 19 பெரிய மருத்துவமனைகள்; 20 ஆம்புலன்ஸ் வாகனங்கள்; 70 தொழிற்சாலைகள்; 49 ஊடக அலுவலகங்கள்; இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமாகியுள்ளன. 15க்கும் அதிகமான புகழ்பெற்ற ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ள னர். இஸ்ரேல் தாக்குதலில் ஐ.நா. ஊழியர்களும் அலுவலகங்களும் கூட தப்ப வில்லை. ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறது. மூன்றில் ஒரு குழந்தை உயிரிழக்கிறது. இத்தகைய மனிதத்தன்மையற்ற தாக்குதலை நடத்தும் இஸ்ரேலையும் அதனை நியாயப்படுத்தும் மேற்குலக நாடுகளையும் என்னவென்று அழைப்பது? - தொடரும்