world

img

தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற போட்டா போட்டி

காத்மண்டு, அக்.20- நேபாளத்தில் நவம்பர்-20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு பிரச்சனைகளோடு, சில கட்சிகள் தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற முயற்சிப்பதும் முக்கியமான  அம்சங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒற்றுமைக்கு பெரும்  வெற்றி கிடைத்தது. கே.பி.சர்மா ஒலியின் தலைமையில் ஆட்சியும் அமைந்தது. பல்வேறு காரணங்களால் இந்த ஒற்றுமை குலைந்து போனது. நாடாளுமன்றக் கலைப்பு, பின்னர் நீதிமன்றம் அந்தக்  கலைப்பை நிராகரித்து மற்றும் மீண்டும் கலைத்து பொதுத்தேர்தலுக் கான அறிவிப்பு என்று கடந்த ஓராண்டாக அரசியல் நிலவரம் குழப்பமானதாகவே இருந்தது. தற்போது நவம்பர்-20 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வரும் தேர்தலில் பல்வேறு சிறிய கட்சிகளுக்கு தேசியக் கட்சி அந்தஸ்து என்பது முக்கியமான பிரச்சனையாக உள்ளது. தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலில் ஒருநபர் தொகுதிகளில் குறைந்த பட்சம் ஒரு தொகுதி மற்றும் மொத்த வாக்குகளில் 3 விழுக்காடு வாக்குகளைப் பெறும் கட்சிக்கு தேசியக் கட்சி என்ற அந்தஸ்து கிடைக்கும். இதைப் பெறாத கட்சிகளின் உறுப்பினர்கள் நாடாளு மன்றத்தில் சுயேச்சைகளாகப் கருதப்படுவார்கள்.  நேபாள நாடாளுமன்றத்தில் இருவகைத் தேர்தல் நடைபெற வுள்ளது. ஒருநபர் தொகுதிகளில் முதலிடத்தைப் பெறுபவர் உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவார். 165 தொகுதிகளில் இந்தத்  தேர்வு நடைபெறும். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவப்படி, 110 தொகுதி களுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கட்சிகள் பெறும் வாக்குகளுக்கு ஏற்ப, அவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப் போர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். சிறிய கட்சிகள் இரண்டை யும் குறிவைத்துக் களத்தில் இறங்கியுள்ளன.

2017-ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகளின்படி, ஆறு அரசியல் கட்சிகளுக்கு தேசியக் கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மையம்), நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய சோசலிஸ்ட்) கட்சி, ஜனதா சமாஜ்வாதி கட்சி மற்றும் லோக் தாந்திரிக் சமாஜ்வாதி கட்சி ஆகியவை தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற்றிருந்தன. இந்தக் கட்சிகளில் முதல் மூன்று கட்சிகளுக்கும் எந்தவிதச் சிக்கலும் இல்லை. மற்ற அனைத்துக் கட்சிகளும் தேசிய அந்தஸ்துக்காகப் போட்டியிடுகின்றன.

உள்ளாட்சித் தேர்தல்கள்

மே 2022இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் முதல் மூன்று இடங்களை நேபாள காங்கிரஸ் (34 விழுக்காடு), நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி (33 விழுக்காடு) மற்றும் நேபாள கம்யூனிஸ்ட்(மாவோயிஸ்ட் மையம்) கட்சி  (13 விழுக்காடு) பெற்றன. இதில், நேபாள காங்கிரசும், மாவோயிஸ்ட் மையமும் கூட்டணி சேர்ந்துள்ளன. உள்ளாட்சித் தேர்தல் முடிவு களின்படி, இந்தக் கூட்டணி வெற்றி பெறலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. ஆனால், ஆளும் நேபாள காங்கிரசுக்குள் கோஷ்டி மோதலும் இருக்கிறது. அதைத் தீர்த்துக் கொள்ள முயற்சிகள் நடக்கின்றன. நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி, சிறிய கட்சிகளை இணைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொள்கிறது. ராஷ்டிரிய சுதந்திராக் கட்சி போன்ற புதிய கட்சிகளும் களத்தில் உள்ளன. இந்தக் கட்சிகளின் இலக்கே, முதலில் தேசியக் கட்சி அந்தஸ்து பெற வேண்டும் என்பதாகவே இருக்கிறது. முதலிரண்டு இடங்களுக்கான போட்டியில் ஆளும் நேபாள காங்கிரஸ்-மாவோயிஸ்டு மையம் அடங்கிய கூட்டணிக்கும், நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சிக்கும் இடையில்தான் இருக்கப் போகிறது.
 

;