கோவிட் 19 தாக்கத்தின் எதிரொலியாக இத்தாலியில் வறுமையில் இருப்போரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.
கொரோனா என்கிற கோவிட் 19 வைரசின் தாக்கம் உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டுள்ளது. இவற்றிலிருந்து உலக நாடுகள் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், வைரசும் தன்னை உருமாற்றிக் கொண்டு மீண்டும், மீண்டும் தனது வீரியத்தை காட்டி வருகிறது. இதன்காரணமாக, ஒட்டுமொத்த உலகமே நிலையற்றதாக மாறியுள்ளது. வளர்ந்த, வளரும் நாடுகள் என அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
இச்சூழலில் ஐரோப்பிய கண்டத்தில் வளர்ந்த நாடாக கருதப்படும் இத்தாலி நாடும் வறுமையின் கோர பிடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், கோவிட் 19 தாக்கத்திற்கு பிறகு வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, 2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தை காட்டிலும், வறுமையில் இருப்போரின் எண்ணிக்கை தற்போது 100 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 20 லட்சம் குடும்பங்கள் வறுமையின் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.