லண்டன், அக்.7- பிரிட்டனில் சுமார் 7 லட்சம் முதியோர்கள் மீண்டும் வேலைக்குச் செல்வது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
"மை பென்சன் எக்ஸ்பெர்ட்" என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல முடிவெடுத்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியம் அவர்களுக்குப் போதவில்லை என்பதால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அண்மைக்கால நெருக்கடி அவர்களின் வாழ்க்கையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதால் இந்த முடிவை அவர்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
பிரிட்டனில் 1 கோடியே 22 லட்சம் ஓய்வூதியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓய்வூதியத்தைக் கொண்டு அவர்கள் நடத்தி வந்த நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை குலைந்து விட்டது என்பது அந்த ஆய்வின் முடிவில் சொல்லியிருக்கிறார்கள். அதிகாரத்திற்கு வந்த அரசுகள் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை நெருக்கடியில் தள்ளிவிட்டார்கள் என்று தேசிய ஓய்வூதியர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தங்கள் ஓய்வுகாலத் திட்டங்களைக் கடுமையான உயர்ந்திருக்கும் பணவீக்கம் ஒன்றுமில்லாமல் செய்து விட்டது என்று 12 விழுக்காடு ஓய்வூதியர்கள் கருதுகிறார்கள். எப்படித் தங்கள் ஓய்வுக்காலத்தை கழிக்க வேண்டுமென்று நினைத்தார்களோ, அப்படிக் கழிக்க முடியாது என்று 34 விழுக்காடு ஓய்வூதியர்கள் நினைக்கிறார்கள். பெரும் பகுதியினர் தாங்கள் மீண்டும் வேலை செய்து வருமானம் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகச் சொல்கின்றனர்.
இந்த நெருக்கடியை "ஓய்விழப்பு" என்று ஓய்வூதியர்கள் அமைப்பு சொல்கிறது. தங்களின் ஓய்வுக்காலத்தை இழந்து வயதான காலத்தில் மீண்டும் வேலைக்கு சென்றாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். "செலவுக்கான பணத்தேவை அதிகரிக்க, அதிகரிக்க இந்த ஓய்விழப்பும் அதிகரிக்கும்" என்று ஓய்வூதியர்களின் ஆலோசகர்களில் ஒருவரான ஆண்ட்ரூ மெக்சான் சொல்கிறார்.
நெருக்கடி புதிதல்ல தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒன்றும் புதிதல்ல என்று சொல்லும் தேசிய ஓய்வூதியர் அமைப்பின் செயலாளரான ஜான் ஷார்ட், "இந்த நெருக்கடிக்கு முன்பும்கூட, ஒரு ஓய்வூதியர் என்ன செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்ய முடிவதில்லை. இது ஒரு முக்கியமான பிரச்சனையாகும். பல பத்தாண்டுகளாகப் பணியாற்றி விட்டு, மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏராளமான ஓய்வூதியர்களுக்கு பலத்த அடியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வூதியத்தின் மதிப்பில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதே இந்த நெருக்கடியை ஓய்வூதியர்களால் சமாளிக்க முடியாமல் போனதற்குக் காரணமாக உள்ளது. அரசின் கொள்கைகள் பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் பலன்களைத் தருவதில் முனைப்பாக இருக்கிறது. ஆனால், மூத்த குடிமக்கள் விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறது என்பதே ஓய்வூதியர்களின் கருத்தாக இருக்கிறது.