லண்டன், அக்.21- வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரதமர் பொறுப்பில் இருந்த லிஸ் டிரஸ்சுக்குப் பிறகு யார் பிரதமர் என்ற போட்டியில் போரிஸ் ஜான்சனும் நுழைய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலையில், லிஸ் டிரஸ் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பிரிட்டன் வரலாற்றில் இவ்வளவு குறைவான நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தவர்கள் வேறு யாரும் இல்லை. அவருடைய இடத்தில் யாரை அமர வைப்பது என்ற ஆலோசனையில் பிரிட்டனின் ஆளும்கட்சி ஈடுபட்டுள்ளது.
அடுத்த வாரத்திற்குள் புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அக்.26 ஆம் தேதிக்குள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். வாக்குச் சீட்டில் இடம் பெறுவதற்கு 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆளும்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 357 உறுப்பினர்கள் உள்ளனர்.
அடுத்த பிரதமருக்கான போட்டியில், ரிஷி சுனாக் முன்னணியில் இருக்கிறார். லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டபோது, இறுதிச் சுற்று வரையில் ரிஷி சுனாக்தான் முதலிடத்தில் இருந்தார். தற்போது மீண்டும் முதலிடத்தில் உள்ளார். மேலும், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் போட்டியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கும் அவர், அவசர, அவசரமாக நாடு திரும்பிக் கொண்டிருக்கிறார்.
மேலும் பென் வாலஸ், பென்னி மோர்டான்ட், கெமி படேனோச், ஜெரிமி ஹன்ட் மற்றும் சுவெல்லா பிரேசர்மேன் ஆகியோரும் களத்தில் இருக்கிறார்கள்.