ஏகபோக முதலாளித்துவச் சுரண்டல் மேலும், மேலும் அதிகரிப்பதால் புதிய, புதிய வடிவங்களிலான நவீன அடிமை முறைகள் உருவாகின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
வாக்ஃப்ரீ என்ற அமைப்புடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. உலகம் முழுவதும் கட்டாயப்படுத்தி வேலைகளில் தள்ளும் நிலைமை இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இத்தகைய நிலைமை நிலவுவது பற்றியும், எவ்வளவு தூரத்திற்கு அது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அளவிடுவது பற்றியும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அண்மைக்காலத்தில் இது பெருமளவு அதிகரித்திருப்பதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 கோடி மக்கள் இந்த நவீன அடிமைமுறையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்று கூறும் ஆய்வறிக்கை, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 2 கோடியே 80 லட்சம் பேர் கட்டாயமாக பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் .மேலும் 2 கோடியே 20 லட்சம் பேர் கட்டாயப்படுத்தப்பட்ட திருமணம் செய்விக்கப்பட்டுள்ளனர். இத்தகைய அம்சங்களை ஐக்கிய நாடுகள் சபை நவீன அடிமை முறை என்று அடையாப்படுத்துகிறது.
தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் போர் நெருக்கடிகள் ஆகியவற்றால் வரலாறு காணாத அளவில் கல்வியும், வேலையும் மறுக்கப்பட்டன. இதனால் கடுமையான வறுமை அதிகரித்தது. இதில் சிக்கியவர்கள் வேறு வழியின்றி தங்கள் இடங்களில் இருந்து வெளியேறி, பலவந்தமாகப் பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஐ.நா. சபை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, உலகில் உள்ளவர்களில் 150 பேருக்கு ஒருவர் இத்தகைய நெருக்கடியில் சிக்கியுள்ளார் என்று தெரிய வருகிறது.
இந்த நெருக்கடியில் சிக்கியுள்ள 5 கோடிப் பேரில் 20 விழுக்காட்டினர் குழந்தைகளாவர். அந்தக் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் பாலியல் வியாபாரத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்து வந்துள்ளவர்கள் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள். அடிமட்டக் கூலிகளாக அவர்கள் மாறுவதோடு, இளம்வயதுப் பெண்கள் அனைத்து வகையான சுரண்டல்களிலும் சிக்கிக் கொள்கின்றனர். வரும் காலத்தில் இத்தகைய நவீன அடிமை முறையில் சிக்கிக் கொள்பவர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரிக்கும் என்றும் ஆய்வு எச்சரிக்கிறது.
அரசும் குற்றவாளி
இந்த அறிக்கை குறித்துக் கருத்து தெரிவித்த இடம் பெயர்பவர்களுக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் அன்டோனியோ விடோரினோ, "இடம் பெயர்ந்து வருவதை பாதுகாப்பாக, ஒழுங்கானதாக மற்றும் தொடர்ச்சியானதாக இருக்கச் செய்வதன் அவசர, அவசியத்தை இந்த அறிக்கை காட்டுகிறது" என்றார். கட்டாயமாக வேலை செய்ய வைப்பது மற்றும் கட்டாயத் திருமணம் ஆகியவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை உயர் நடுத்தர வருமானம் கொண்ட அல்லது உயர் வருமானம் கொண்ட நாடுகளில்தான் நிகழ்ந்துள்ளன.
கட்டாயப்படுத்தப்பட்ட வேலைகளில் பணியாற்றுபவர்களில் 14 விழுக்காட்டினர் அரசுகளால் நியமிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இது பெரும் கவலைக்குரியதாக மாறியிருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிறைகளில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு கட்டாய வேலை என்ற பெயரில் அவர்களைச் சுரண்டுவது பல நாடுகளில் நடக்கின்றன. இந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.