சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு அரங்கில் பல்வேறு குழுக்கள் தனித்தனியாகவும் விவாதங்களை நடத்துகின்றன. அவற்றில் சில விவாதங்களில் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் நேரில் பங்கேற்று விவாதிக்கிறார்.
பெய்ஜிங், அக்.18- சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த பத்தாண்டுகளில் அதன் செயல்பாடுகள் பற்றிப் பல மட்டங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. உலகப் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, உலகில் உள்ள 140 நாடுகளுடனான வர்த்தகத்தில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நாடுகளுடன் பெரும் அளவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை செய்து வருகிறது. வர்த்தகம் மூலம் பொருட்களைப் பரிமாறிக் கொள்வதில் ஒட்டுமொத்தமாகவும் சீனாதான் முன்னணியில் இருந்து வருகிறது. இது சீனாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் பெரிய அளவில் பலனளிக்கிறது. மலேசியாவின் பசிபிக் ஆய்வு மையத்தின் தலைமை ஆலோசகரான எய் சுன் கூறுகையில், “கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியால் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலன் அடைந்துள்ளன. சீன-ஆசியன் திறந்த வர்த்தகப்பகுதி மற்றும் பிராந்திய பொருளாதார உடன்பாடு ஆகியவை பெருமளவில் உதவி புரிந்துள்ளன. வருங்கால வளர்ச்சியில் “தரம்” என்பதை முக்கியமான இலக்காக சீனா நிர்ணயித்துள்ளது. இது சீனாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு பெருமளவில் பலன்களைத் தரும்” என்று குறிப்பிடுகிறார்.
புதிய வளர்ச்சிக் கோட்பாடு
அனைத்துத் துறைகளிலும் புதிய வளர்ச்சிக் கோட்பாட்டை நாம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான ஜி ஜின்பிங், “நாம் நடைமுறைப்படுத்தியுள்ள சோசலிச சந்தைப் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும். உள்நாட்டுப் பொருளாதாரம் வளர்வதை இலக்காகக் கொண்ட பணிகள் முடுக்கி விடப்பட வேண்டும்” என்றார். உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 18.5 விழுக்காட்டைப் பெற்றிருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பாக இந்த உற்பத்தி 11.3 விழுக்காடாக இருந்தது. இந்த வளர்ச்சியை மேலும் தரமானதாக மாற்றுவதையும் சீனா இலக்காக நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது. இதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது நடைபெற்று வரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டு முடிவுகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
துல்லிய அணுகுமுறை
கடந்த பத்தாண்டுகளில் கடுமையான வறுமையில் இருந்து மீட்டெடுத்தது மக்கள் சீனத்தின் முக்கியமான வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வறுமையில் வாடி வந்த 9 கோடியே 89 லட்சம் கிராமப்புறத்தினரை வறுமையின் பிடியிலிருந்து மீட்டனர். துல்லியமான நடவடிக்கைகளால் இது சாத்தியமானது. அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள், உண்மையிலேயே வறுமையில் வாடும் மக்கள் மற்றும் அந்த வறுமைக்கான காரணங்களை அறிந்து நடவடிக்கைகள் எடுத்தனர். கடுமையான வறுமை நிலவிய கிராமங்களில் சுமார் 2 கோடி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். முன்களப் பணியாளர்களாக அவர்கள் செயல்பட்டனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும், சில இடங்களில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும், தனித்தனியாக வறுமையில் இருந்து மீள்வதற்கான திட்டம் தரப்பட்டது. உலக அளவில் வறுமையை மீட்டெடுக்கும் இலக்கில் பெரும்பகுதியை அடைவதற்கு சீனாவின் சாதனை உதவிகரமாக இருந்திருக்கிறது.