world

ஆசிய-பசிபிக்கில் நுழைய வேண்டாம்: சீனா எச்சரிக்கை

பெய்ஜிங், ஜூலை 12- அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணி ஆசிய-பசிபிக் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று சீனா எச்சரித்துள்ளது. ஐரோப்பிய யூனியனுக்கான சீனத் தூதரகம் ஒரு அறிக்கை மூலமாக இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. தற்போது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணியின் மாநாடு லிதுவேனியாவின் தலைநகர் வில்னியசில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சீனாவின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. வட அட்லாண்டிக் பகுதி நாடுகளின் கூட்டத்தில் சீனா பற்றிய குற்றச்சாட்டுகள் தேவையற்றவை என்று ஐரோப்பிய யூனியனுக்கான சீனத் தூதரகம் விமர்சித்திருக்கிறது. தங்கள் நியாயமான உரிமைகளுக்கு நெருக்கடி தர முயன்றால் தக்க பதிலடி வழங்கப்படும் என்று தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். நேட்டோ மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட அம்சங்கள் எந்த அடிப்படையும் இல்லாதவை என்றும், சர்வதேச மற்றும் பிராந்தியப் பிரச்சனைகளில் சீனாவின் நிலைபாடும், கொள்கையும் மிகவும் தெளிவாக, வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடிப்படை உண்மைகளை மறைக்க நேட்டோ முயல வேண்டாம் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.